ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க துஷ்யந்த் சவுதாலா ஆதரவு!

பாஜக ஹரியானா மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளபோதிலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு அந்தக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31  இடங்களிலும், சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய தேசிய லோக் தளம், ஹரியானா லோஹித் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களை வென்றுள்ளன. ஏழு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியானா  சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் 46 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். எனவே பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரசும், ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்தால் கூட ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காது. அதனால், மீண்டும் மனோகர் லால் கட்டாரி தலைமையில் ஆட்சி அமைக்க, ஜனநாயக ஜனதா கட்சியை பாஜக அணுகி உள்ளது.

அதன் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, முதல்வர் பதவியை கேட்டதால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, அங்கு வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ கோபால் காந்தா உள்ளிட்ட ஏழு பேர், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.

அதனால், சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.

ஆனால், சுயேச்சை எம்.எல்.ஏ கோபால் காந்தா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், விமானப் பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாலியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறை தண்டனை அனுபவித்தவர்.

அதனால், பாஜக அவரது ஆதரவை ஏற்கக்கூடாது என்று அங்குள்ள பல்வேறு கட்சிகளும், பாஜகவை சேர்ந்த சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.