விக்கிரவாண்டி: ஸ்டாலினுக்கு ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த வன்னியர்கள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றிபெறும் என்பது அனைவரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், இவ்வளவு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடையும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

திமுகவின் இத்தகைய பின்னடைவுக்கு, அதன் தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்த வன்னியர் பிரச்சினையே முக்கிய காரணம் என்று திமுகவில் இருக்கும் வன்னியர்களே கூறுகின்றனர்.

சாதாரணமாக, ஆளும் அதிமுகவையும், பாஜகவையும் விமர்சிப்பதோடு நிறுத்தி இருந்தால், திமுக இந்த அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்று இருக்காது.

திமுக தலைவர் ஸ்டாலின் தேவை இல்லாமல், வன்னியர் அரசியலையும், ராமதாஸ் எதிர்ப்பையும் கையில் எடுத்ததே, மிகப்பெரிய தோல்விக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே, திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, வன்னிய தியாகிகளுக்கு மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் என்ற அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார்.

அத்துடன், திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு செய்த சலுகைகள் போன்றவற்றையும் அந்த அறிக்கையில் அவர் பட்டியல் இட்டிருந்தார்.

இந்த அறிக்கைதான், சும்மா இருந்த பாமக நிறுவனர் ராமதாசையும், கட்சி சார்பற்ற வன்னியர்களையும் திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளது.

ஸ்டாலின் அறிக்கைக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள், வன்னிய மக்களிடம் அதிக அளவில் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி விட்டது.

இடஒதுக்கீடு கோரி, ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டத்தை, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்தும், அது நெருங்கும் சமயத்தில் திமுக தலைவர் கலைஞர், திடீரென அறிவித்த அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவே, 21 வன்னியர்கள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தற்கு கரணம் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.

2017-ம் ஆண்டு நடந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளாத நிலையில், அவர் இறந்து நாற்பது வருடங்களை கடந்து, அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?.

வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று திமுக மாவட்ட செயலாளர்கள் இருந்தும், அதில் ஒருவர் கூட வன்னியர் இல்லையே? என்பது உள்ளிட்ட ராமதாசின் கேள்விகளுக்கு ஸ்டாலினால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை.

மாறாக, திமுகவில் உள்ள முக்கிய வன்னிய தலைவர்களான, ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செல்வகணபதி, இதுவரை ஒதுக்கி வைத்திருந்த ஏ.ஜி.சம்பத், சேலம் பார்த்திபன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போன்றவர்களை தொகுதிக்குள் அனுப்பி, முக்கிய வன்னிய பிரமுகர்களை சந்திக்க வைத்தார் ஸ்டாலின்.

அத்துடன், செயலற்று முடங்கிக்கிடந்த ஜகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை, வன்னிய குல ஷத்திரிய கூட்டமைப்பு போன்றவற்றின் மூலம் ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தொகுதி முழுவதும்  போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

இவை, ஏற்கனவே ஸ்டாலின் மீது கோபத்தில் இருந்த ராமதாசின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதுவரை, பிரச்சார திட்டமே இல்லாமல் இருந்த ராமதாஸ், திடீரென விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து, பஞ்சமி நில விவகாரத்திலும் ஸ்டாலின் – ராமதாஸ் இடையேயான அறிக்கைப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஏற்கனவே, விழுப்புரத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. உழைப்பது வன்னியர், பிழைப்பது மற்றவரா? என்ற கேள்வியுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களே, வன்னியர்களுக்கு திமுகவின் மீதான வெறுப்பை அதிகப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தேவை இல்லாமல், வன்னியர் அரசியலை ஸ்டாலின் கையில் எடுத்தது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் வெற்றிக்காகத்தான் என அப்பட்டமாக தெரிந்தது.

அத்துடன், வன்னியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராமதாசை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மற்றொரு கட்சி தலைவர் அவரை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில்தான் உள்ளனர்.

இவை அனைத்தையும் வைத்துத்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஷாக் டிரீட்மென்ட் கொடுத்துள்ளனர் என்றே சொல்லப்படுகிறது.