விக்கிரவாண்டி அதிமுக வெற்றியின் நிஜ ஹீரோ சி.வி.சண்முகம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகுதியில், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன்தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டார்.

அதையடுத்து, சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான, முத்தமிழ்செல்வன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல், திமுக வேட்பாளராக பொன்முடியின் ஆதரவு பெற்ற புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என்பது, அமைச்சர் சண்முகத்துக்கும், பொன்முடிக்குமான போட்டி என்றே கூறப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக குறைவான வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் தோற்றாலும், பாமக தனித்து நின்று 41 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றிருந்தது.

ஆனாலும், அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், அதிமுக பாமக இணைந்து போட்டியிட்டாலும், விக்கிரவாண்டி தொகுதியில் போதுமான வாக்குகளை, இந்த கூட்டணி பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், கூட்டணி கட்சியில் இடம்பெற்ற, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தை தனித்தனியாக கூட்டி, வெற்றிக்கான வியூகத்தை வகுத்துக் கொடுத்ததுடன், அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தியே வந்தார் சண்முகம்.

திமுகவின் முக்கிய வன்னிய தலைவர்கள் பலரும் தொகுதியில் உள்ள, வன்னியர் வாக்குகளை குறி வைத்து, முக்கிய புள்ளிகளை சந்தித்து, வளைப்பதை சாதுர்யமாக முறியடித்தார்.

மேலும், திமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள், பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டவர்கள் அனைவரையும், தம்பக்கம் இழுத்தார்.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைமை பிரச்சாரத்திற்கு வரும்போது, வரும் வழியில் சாலையின் இருபுறமும், பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி நம்பிக்கை ஊட்டினார்.

அனைத்துக்கும் மேலாக, தமது மகனைப்போல வளர்த்து வந்த தங்கையின் மகன், தற்கொலை செய்து கொண்ட தாளாத துக்கத்தையும் மனதுக்குள் புதைத்துக்கொண்டு, அதிமுகவின் வெற்றி ஒன்றே தமது குறிக்கோள் என்று உறுதியாக பிரசாரத்தை சுணக்கம் இல்லாமல் கொண்டு சென்றார்.

இதுபோன்ற கடுமையான உழைப்பே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது என்று, அத்தொகுதி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.

திமுகவில் கடந்த பல ஆண்டுகளாக மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியை 2011 ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியிலேயே தோற்கடித்தார் சண்முகம்.

அந்த வெற்றியை கடந்த தேர்தலிலும் தக்க வைத்துக்கொண்ட சண்முகம், இந்த இடைத்தேர்தலிலும் அதிமுகவின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹீரோ, அமைச்சர் சி.வி.சண்முகம் என்றே அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.