ரஜினிக்கு புதிய அரசியல் பாதை: பாஜக அமைக்கும் வியூகம்!

ரஜினி அரசிலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் பாஜகவில் இணைவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என ரஜினியையும் அரசியலையும் மையப்படுத்தி எத்தனையோ கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம்.

ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அவர் ஒப்புக்கொண்ட படங்களை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டு, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு களம் இறங்குவார் என்று அவருக்கு நெருக்கமான தமிழருவி மணியன் கூறி இருக்கிறார். ஆனால், ரஜினி தரப்பில் இருந்து, நேரடியாக எந்த பதிலும் இதுவரை இல்லை.

தமிழகத்தில் திமுக, அதிமுக இருக்கும் வரை, பாஜக  கால்பதிப்பது அவ்வளவு எளிதல்ல. அதேபோல், திமுக, அதிமுக பலம் இழந்தாலும், அந்த இடத்தில் பாஜகவை வைத்து பார்க்க தமிழக தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதும் பாஜகவுக்கு நன்கு தெரியும்.

அதன் காரணமாகவே, ரஜினியை அரசியலில் களமிறக்க பாஜக தீவிரமாக செயலாற்றி வருகிறது. ரஜினி, பாஜகவுக்கு வந்தால், அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, திமுக, அதிமுக தவிர்த்த கட்சிகளை கூட்டணியில் இடம்பெற செய்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்பது பாஜகவின் திட்டம். இதன் வெளிப்பாடுதான், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேலூரில் நேற்று பேசியது.

ஆனால், ரஜினியை பொறுத்தவரை, அவர் பாஜகவில் இணைய விரும்பாமல், தனித்து இயங்கவே விரும்புகிறார். வேண்டுமானால், பாஜகவை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தடை இல்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலை, தமக்கு சாதகமாக இருக்கும் என்று ரஜினி நினைக்கிறார். தமிழகத்தின் வலுவான கட்சிகளான அதிமுக திமுகவை பலவீனப்படுத்த, இதுவே சரியான தருணம் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது.

இந்த புள்ளிதான், ரஜினியும், பாஜகவும்  அரசியலில் கைகோர்ப்பதற்கு சாதகமான புள்ளி என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ரஜினி பாஜகவில் இணைந்தாலும் சரி, தனிக்கட்சி ஆரம்பித்தாலும் சரி, அவருக்கென்று சில சாதகமான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டமும் பாஜகவில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், தமிழ் நாட்டில் சில முக்கிய கட்சிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் வரும். அந்த நெருக்கடிகள், கட்சியில் சில பிளவுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கும்.

அந்த நெருக்கடி ரஜினிக்கும், பாஜகவின் திட்டத்திற்கும் வலுவான பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.