முரசொலி பஞ்சமி நிலமா?: விசாரணை செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மனு!

முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா? என்பதை விசாரணை செய்ய வலியுறுத்தி, பாஜக மாநில செயலாளர் ஆர்.சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

அசுரன் படத்தை பாராட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், தமது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தால் பாராட்டுக்கள் என்று கூறி இருந்தார்.

அதையடுத்து, முரசொலி அலுவலகத்தின் பட்டா உள்ளிட்ட சில ஆவணங்களை இணைத்து, அது பஞ்சமி நிலம் அல்ல என்று பதில் கூறிய ஸ்டாலின், ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

முரசொலியின் நிலப்பதிவு, மூல ஆவணங்கள் எங்கே? என ராமதாஸ் பதில் கேள்வி கேட்டார். ஆனால், நிலப்பதிவு, மூல ஆவணங்களை நான் வெளியிட தயார், அதற்கு முன் நான் விடுக்கும் அறைகூவலை ஏற்று, ராமதாசும், அன்புமணியும் பதவி விலக தயாரா? என்று மீண்டும் கேள்வி கேட்ட ஸ்டாலின் இதுவரை மூலப்பத்திரம் எதுவும் வெளியிடவில்லை.

இதனிடையே, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமையவில்லை என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிடுவதில் என்ன தயக்கம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரத்தை, மதிமுக பொது செயலாளர் வைகோ ஏற்கனவே வெளியிட்டு விட்டார் என்று கூறினார்.

இந்த அறிக்கை போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பாஜக மாநில செயலாளர் ஆர்.சீனுவாசன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா? என்பதை விசாரிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதையடுத்து, தமிழக தலைமை செயலாளருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், பாஜக மாநில செயலாளர் சீனுவாசனின் குற்றச்சாட்டு தொடர்பான உண்மை நிலை என்ன? என்பதையும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஏழு நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநில செயலாளர் சீனுவாசன்,  ராமதாசின் கூற்றை நம்பி, மண் குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கி உள்ளார். அவருக்காக நான் அனுதாபப்படுகிறேன்.

இதற்காக நேரத்தை செலவழிப்பதை விட, இவர் தற்போது கூட்டணி வைத்துள்ள, அதிமுகவின் முன்னாள் தலைவி ஜெயலலிதாவால், பையனூரில் பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலத்தை கைப்பற்ற, ராமதாசுடன் இணைந்து செயல்பட்டால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

இதனிடையே, முரசொலி நில விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்று, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது,  இதற்குரிய தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.