பி.எஸ்.என்.எல் – எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இணைக்கப்படுகின்றன: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசின் டெலிகாம் நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலைக்கு இந்நிறுவனம் தயாராகும்.

நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த இரண்டு அரசுத்துறை நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்க அரசு ரூ.29 ஆயிரத்து ,937 கோடி நிதியை உள்ளிட முடிவு செய்துள்ளது.

இந்த புத்துயிரூட்டும் பேக்கேஜில் ரூ.15 ஆயிரம் கோடி அரசுப் பத்திரங்கள் மூலமும், ரூ.38 ஆயிரம் கோடி சொத்துக்களை பணமாக்கவும் அடுத்த 4 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு போன்ற திட்டங்களுக்கும், 4ஜி ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்குவதற்கும், சொத்துக்களைப் பணமாக்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டு தொலைத் தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் என்.டி.என்.எல். ஆகியவற்றை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இம்மாதிரியான முயற்சி இது 3ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பொதுத்துறை நிறுவனங்களின் மோசமான நிதிநெருக்கடி நிலைகளில் இந்த இணைப்பு நன்மை பயக்கும் என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த முறை இணைப்பு நடைபெறவில்லை எனில் இரு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சிக்கல்தான் என்று இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.