விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு: ரகசிய சர்வே சொல்லும் அதிர்ச்சி தகவல்!

 நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்து விட்டது. விக்கிரவாண்டியில் 84.36  சதவிகித வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக – அதிமுக நேரடியாக போட்டியிடுவதால் தேர்தல் களம் கடைசி வரை சூடாகவே இருந்தது. நாங்குநேரியில் அதிமுக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. எனினும், தேவேந்திர குல வேளாளர்களின் தேர்தல் புறக்கணிப்பு, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடியும், திமுக சார்பில் ஸ்டாலினும் இரண்டு மார்க்கங்களில் தனித்தனியே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், அதிமுக தரப்பில் இருந்த எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு அதிமுகவுக்கு சாதகமாகவும், திமுகவில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு திமுகவுக்கு சாதகமாகவும் இருந்ததால், இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

முதல்வர் எடப்பாடி, அமைச்சர் தங்கமணி மூலமாக, ஒரு எக்சிட் போல் கருத்து கணிப்பை ஏற்பாடு செய்திருந்தார். அந்த கருத்துக் கணிப்பில், மழையால், வாக்குப்பதிவு பாதிக்க வில்லை.

விக்கிரவாண்டியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். நாங்குநேரியில் சில ஆயிரங்கள் வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் எனது அமைச்சர் தங்கமணி டீம் எடுத்த கருத்து கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல். உளவுத்துறை சார்பில் முதல்வரிடம் கொடுக்கப்பட்ட எக்சிட் போல் கருத்துக் கணிப்பிலும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திமுக தரப்பில் இருந்தும், உள்ளூர் திமுக நிர்வாகிகள், ஸ்டாலினுக்கான தனி ஐடி விங் ஆகிய இரு தரப்பிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கருத்து கணிப்பு முடிவுகளிலுமே, இரண்டு தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், ஸ்டாலினும் உற்சாகமாக இருக்கிறார்.

அவரவர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகள், அவர் அவருக்கு சாதகமாகத்தான்  இருக்கும். உண்மை நிலை, தேர்தல் முடிவுகள் வந்தால் மட்டுமே தெரியும்.

எனவே இடைத்தேர்தலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அதிமுக – திமுக என இரு தரப்புக்குமே தற்காலிக மகிழ்ச்சியை தந்தாலும், இறுதி முடிவுகளே, எது உண்மை என்பதை தெளிவுபடுத்தும்.