மருமகன் ஜோதிமணியை ஒதுக்கிய கலைஞர் மகள் செல்வியின் குடும்பம்: பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்த பின்னணி!

கலைஞர் மகள் செல்வி – செல்வம் தம்பதியரின் ஒரே மகள் டாக்டர் எழிலரசி. படிக்கும் காலத்தில், தன்னுடன் படித்த ஜோதிமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எழிலரசி.

இந்நிலையில், கடந்தவாரம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்  தினேஷிடம், குடியாத்தத்தைச் சேர்ந்த ஜாகீர் அகமத்தமான் என்பவர் பணமாற்றம் விஷயமாக பேசியுள்ளார்.

அப்போது தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அந்த பணத்திற்கு, 500 ரூபாய் மற்றும்  2000 ரூபாய் தரவேண்டும் என்றும், ஒரு கோடிக்கு 80 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும் என்றும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இருபது லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்ட தினேஷ், அக்டோபர் 15-ம் தேதி நீலாங்கரையிலுள்ள ஒரு பங்களாவுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்துள்ளார்.

அங்கு ஜாகீரும் தமது நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது, தினேஷிடம் உங்கள் பணம் சரியாக இருக்கிறதா என எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பெட்டியை வாங்கிப் பக்கத்து அறைக்குள் சென்றுள்ளார்.

பணப்பெட்டியுடன் சென்றவர் ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகியும், திரும்பி வராததால், தினேஷ் தரப்பினர் அறைக்கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

பணத்தை எண்ணிப்பார்க்க அறைக்குள் சென்றவர், அப்படியே தப்பி சென்று விட்டார் என்பது அப்போதுதான் தெரிந்துள்ளது.

இதையடுத்து, அறைக்கு வெளியில் அமர்ந்த ஜாகீரின் நண்பரை அடித்து ஜாகீரின் நண்பரை அடித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஜாகீரின் நண்பரை விசாரித்த நீலாங்கரை காவலர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்தப் பணத்தை எடுத்து சென்றவர் செல்வியின் மருமகன் ஜோதிமணி என்று விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

பின்னர், காவல் நிலையத்தில் நடந்த பஞ்சாயத்தின் முடிவில், பணத்தை திரும்பத் தருவதாக ஜோதிமணி தரப்பில் ஒப்புக்கொண்டனர். இதனால், வழக்கில் அவர்களை போலீஸ் விடுவித்தது.

இதையடுத்தே, “எங்கள் மருமகன் ஜோதிமணி அவர்களின் எந்தச் செயல்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்ற விளம்பரத்தை செல்வி-செல்வம் தம்பதியினர் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர்.

ஜோதிமணி – எழிலரசி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் முதல் மகளின் நிச்சயதார்த்தம் கடந்தமாதம் நடந்துள்ளது. இந்த நிலையில் அவர் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார்.

செல்வியின் மருமகன் ஜோதிமணியும் வசதியான குடும்ப பின்னணியை கொண்டவர்தான். பணத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில், அவர் ஏன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரியவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

திமுக ஆட்சி காலத்தில், சிலரிடம் ஒப்பந்தங்களை பெற்று தருவதாகக் கூறி, பணம் பெற்றார் என்ற புகாரும் இவர் மீது ஏற்கனவே கூறப்பட்டது.

இது போல பல சம்பவங்களால் மனம் வெறுத்த, செல்வி குடும்பம் வேறு வழியின்றி, இப்படி ஒரு அறிவிப்பை செய்தித்தாளில் வெளியிடும் நிலைக்கு ஆளாகி உள்ளது என்று சொல்லப்படுகிறது.