ரஜினியின் அரசியல் பிரவேசம்: மோதிக்கொள்ளும் பாஜக –காங்கிரஸ்!

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் வேளையில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின், அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பது போன்ற நம்பிக்கைகள் தென்பட்டன.

அதற்கு ஏற்ப, கடந்த 2017 ம் ஆண்டின் கடைசி நாள், ரசிகர்கள் சந்திப்பின் போது, ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார். அரசியலுக்கு வரப்போவதாகவும் சில ஹின்ட் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, நிர்வாகிகள் நியமனம், சின்னம் என அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன், அரசியல் கட்சியை தொடங்கி விடுவார் என்று, அவருக்கு நெருக்கமான தமிழருவி மணியன் கூறி இருந்தார்.

இதனிடையே, தேர்தல் வியூக மன்னன் என்று அழைக்கப்படும், பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்த ரஜினி, தமிழக அரசியல் நிலை மற்றும் தமக்குள்ள மக்கள் செல்வாக்கு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றால், அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாராட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும், ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் நீண்ட காலமாகவே கூறி வருகிறேன். ஆனால், அதற்கான முயற்சியில் நான் ஈடுபடவில்லை.

ரஜினியை பொறுத்தவரை பாஜகவுக்கு  இணக்கமாக இருந்து வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளில் பாஜகவுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார் என்றும் பொன்னார் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாகவில் இணைந்தாலோ, அதனால், தமிழகத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.

ஆன்மீகத்தில் நாட்டமுடைய ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

அழகிரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பொன்னார், ரஜினி குறித்த அழகிரியின் கருத்தை பயனற்றதாக கருதுகிறேன். ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது என்று கூறியுள்ளார்.