பஞ்சமி நில விவகாரம்: ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் பாஜக!

முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவரிடம் ஒப்படைத்தால் பாராட்டுக்கள் என்று ஸ்டாலினுக்கு ராமதாஸ் கொடுத்த டுவிட்டர் பதிலில் தொடங்கிய இந்த விவகாரம், இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ராமதாசுக்கு பதில் சொன்ன ஸ்டாலின், முரசொலி நில பத்திரங்கள் சிலவற்றை இணைத்து மீண்டும் டுவிட்டரில் வெளியிட்டார்.

அது சரி, நிலப்பதிவு பத்திரங்கள், மூல ஆவணங்கள் எல்லாம் எங்கே? என்று அதற்கு ராமதாஸ் மீண்டும் கேள்வி எழுப்பி இருந்தார்.

நிலப்பத்திரங்கள், மூல ஆவணங்களை எல்லாம் கொடுத்தால், நீங்களும், உங்கள் மகன் அன்புமணியும் அரசியல் விட்டு ஒதுங்கி விடுகிறீர்களா? என்று ஸ்டாலின் திருப்பி கேட்டிருந்தார்.

இதற்கு, பாமக தலைவர் ஜி.கே.மணியின் அறிக்கையில் பதில் கூறப்பட்டு இருந்தது. எனினும், முரசொலி நிலப்பதிவு ஆவணங்கள் மற்றும் மூல பத்திரங்களை ஸ்டாலின் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில்  “பட்டா வாங்கியிருப்பது 1985 என்றால், முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 ல். ஸ்டாலின் ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை?

பஞ்சமி நிலத்தை அபகரிக்கின்ற பாதகர்களின் கட்சி திமுக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மூலபத்திரத்தை வெளியிட வேண்டும். அதுக்கு ஏன் இவளோ தயக்கம்?  என ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோல், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்றும் பொன்னார் கூறினார்.