மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், மேட்டூர் ஆணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காவிரி டெல்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்துவிடும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.  கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 350 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு முதல், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.33 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று அதிகாலை மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால்,  மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும்.

இதனால், மேட்டூர் அணைக்கு கீழ் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.