பிகில் – கைதி  தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை:  மீறினால்  நடவடிக்கை!

பிகில், கைதி  உள்ளிட்ட எந்தத் திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினாலோ, அதிக கட்டணம் வசூலித்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பருவகால மாற்றத்தினால் டெங்கு போன்ற காய்ச்சல் போன்ற நோய்கள் வருவது இயற்கை. அதை அரசு எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வராமல் தடுப்பது நம் கையில் இல்லை. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தவிர, மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடக் கூடாது.

மதுவிலக்கை ரத்து செய்து மதுவைக் கொண்டுவந்தது திமுகதான். எனவே, முத்தரசன் போன்றோர் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு இப்படிப் பேசக்கூடாது.

பிகில் உள்ளிட்ட எந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கும் அனுமதி  வழங்கவில்லை. தீபாவளிக்குத் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

அதை மீறி சிறப்புக் காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பேற்காது. அதையும் மீறி அந்தப் படத்தை அரசு அனுமதிக்காத நேரத்தில் திரையிட்டால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.