தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் – வைகைப்புயல்  வடிவேலு!

நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே வர ஆரம்பித்து, தமது தனித்தன்மையான உடல்மொழி மற்றும் குரலால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு.

எந்த சூழலை சொன்னாலும், அதற்கு கவிஞர் கன்னதாசனின் பிரபலமான பாடல் ஒன்று மனதில் ஒலிக்கும். அதுபோல, வாழ்வில் எந்த நிலையை சொன்னாலும், அங்கே வடிவேலுவின் காமெடி ஒன்று நம்மையும் மீறி ஞாபகத்துக்கு வரும்.

அதுதான், வைகைப்புயல் வடிவேலு, தமிழ் சினிமாவுக்கு தந்து சென்ற தகர்க்க முடியாத நகைச்சுவை கொடை. ஆரம்ப கால திரைக்கலைஞர்கள் போல, பாட்டு பாட தெரிந்தது வடிவேலுக்கு ஒரு கூடுதல் பலம். .

எப்போது தொலைகாட்சி பார்த்தாலும், அதில் ஏதாவது ஒரு சேனலில்  வடிவேலுவின் நகைச்சுவை காட்சி கண்டிப்பாக ஓடிக்கொண்டே இருக்கும்.

தமிழ் சமூக ஊடகங்களில், மீம்ஸ் கலாச்சாரம் எப்போது ஆரம்பித்ததோ, அன்று முதல் இன்று வரை, அனைத்து மீம்ஸ் கிரியேட்டர்களும், சம்பளம் கொடுக்காமல் அதிக அளவில்  பயன்படுத்திக் கொள்வது, வடிவேலுவைத்தான்.

அண்மையில், மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆன  “காண்ட்ராக்டர் நேசமனிக்கு என்னாச்சு” என்ற மீம்ஸ் அனைவரையும் சிரிக்க வைத்தது.

அரசியல் தலைவர்கள் பேசுவதை கலாய்ப்பது. அவர்கள் விடும் சவால்களை கலாய்ப்பது என்று வடிவேலு மட்டும் இல்லை என்றால், சேனல்களும் இல்லை, சமூக வலைதளங்களும் இல்லை என்ற நிலைக்கு முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டார் அவர்.

“இது வேற வாய் – அது நாற வாய்” “கைப்புள்ளே’ “ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க” “வக்கீல் வண்டு முருகன்” “டெலக்ஸ் பாண்டியன்” “சூனா-பானா” இப்படி வடிவேல் செய்த காமெடிகள் பார்த்தால் மட்டும் அல்ல, நினைத்தாலே சிரிக்க வேண்டி இருக்கும்.

பிறவிக் கலைஞன் என்று சிலரை கூறுவதுண்டு. அது வடிவேலுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். மண்ணையும், மனிதர்களையும், அவர்தம் இயல்புகளையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல், மூச்சு முட்டும் அளவுக்கு  உள்வாங்கிய ஒரு மாபெரும் கலைஞன் வைகைப்புயல் வடிவேலு.

நாம் அன்றாடம் பார்க்கும் அண்டை வீட்டு மனிதர்களின் தோற்றம், செயல்பாடு, அதற்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவை என அனைத்தையும் மிக இயல்பாக நடித்துக் காட்டும் – வாழ்ந்து காட்டும் திறனை எந்தவித மிகைப்பாடும் இதல்லாமல், இவரிடமே காணமுடியும்.

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், எம் மகன் படத்தில், நாசரிடம் இருந்து, பரத்தையும் – முறைப்பெண்ணையும் காப்பாற்றுவதற்கு, அவர் தவிக்கும் தவிப்பில் அற்புதமான குண சித்திர நடிகராக ஜொலிப்பார்.

ஆடாத மேடை இல்லை. போடாத வேஷம் இல்லை என்பது போல, நாவிதர், துணி வெளுப்பவர், மயான தொழிலாளி, சாணை பிடிப்பவர், உடற்பயிற்சி வாத்தியார், நாட்டாமை என எல்லாவித வேடத்திலும் இவர், தமக்கு கிடைத்த வாய்ப்பை முழுக்க முழுக்க மிச்சம் வைக்காமல் பயன்படுத்திக் கொண்டவர்.

வடிவேலுக்கு முன்னும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து மிகப்பெரிய சாதனைகளை எல்லாம் படைத்துள்ளனர். ஆனால், வடிவேலைப் பொறுத்தவரை, நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களாய் வந்த சாதித்தவர்.

இவர் தீவிர நடிப்பை விட்டு ஒதுங்கி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும், சமூக ஊடகங்கள் இன்னும் அவரை விடுவதாக இல்லை. ஏனென்றால், வடிவேல் இல்லை என்றால், சமூக ஊடகங்களின் மீம்ஸ்கள் சிறக்காது.

வடிவேலு, வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருந்தாலும், சின்னத்திரையையும், சமூக ஊடகங்களையும் விட்டு அவரால் ஒதுங்க முடியாது. ஏனென்றால், அவற்றின் உயிரோட்டமே வடிவேலிடம்தான் இருக்கிறது.

இந்த மொழியின், இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு கலைஞன் என்று வைகை புயல் வடிவேலுவை தாராளமாக கூறலாம்.