கண்டுகொள்ளாத ஜெயா டி.வி: தனி சேனல் தொடங்கும் முனைப்பில் தினகரன்!

 அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டதால், அமமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய தினகரன், கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பலரை தமது பக்கம் இழுத்தார்.

அவரை நம்பி வந்த சில எம்.எல்.ஏ க்கள் பதவி இழந்தனர். அதையடுத்து, பல முக்கிய நிர்வாகிகள் தினகரன் கட்சியை விட்டு விலகி அதிமுக, திமுக என பல கட்சிகளுக்கு தாவினர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுந்த பலத்த அடி, அவரை நம்பி வந்த பலரையும் யோசிக்க வைத்தது. அவரது தீவிர ஆதரவாளர்களான பெங்களுரு புகழேந்தி, தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட பலரும் விலகியது, கட்சிக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, ஜெயா டி.வி நிர்வாகத்தை கவனித்து வரும், இளவரசியின் மகன் விவேக், ஒரு கட்டத்தில், தினகரன் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தி விட்டார்.

இது பற்றி பலமுறை சிறையில் இருக்கும் சசிகலாவிடம் புகார் அளித்தும், அவர் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவருக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம், எவ்வளவு விரைவில் சிறையில் இருந்து வெளிவருவது என்பதைப் பற்றித்தான்.

மேலும், தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்ததில் கூட அவருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது.

சிறையில் இருந்து தாம் வெளிவருவதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், தினகரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் என்று சசிகலா நினைக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.

இதனால், வேறு வழியின்றி தமது கட்சி மற்றும் தமது இமேஜ் போன்றவற்றை தொடர்ந்து நிலைநிறுத்த, தொலைகாட்சி ஒன்று அவசியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன்.

அதற்காக, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒரு செய்தி சேனலை விலை கொடுத்து வாங்க, முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த சேனலை தினகரன் வாங்கினாலும், பெயர் மாற்றம், உரிமை மாற்றம் போன்றவற்றுக்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அவை அனைத்தும் முழுமையாக கிடைத்த பின்னர், தினகரனுக்கான தனி சேனல் ரெடியாகிவிடும் என்கின்றனர்.