தமிழ்நாடு – புதுச்சேரியில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய  கடலோர மாவட்டங்களில் மேலும்  அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் நேற்று கூறியதாவது:- தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குமரிக்கடல் முதல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடித்து வருகிறது.

அதனால், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் மிதமானது முதல், கனமழை கனமழை பெய்யும்.

உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப் போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9  செமீ, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 8 செமீ, பெருஞ்சாணி, கன்னிமார் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, தக்கலை, பூதபாண்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு,  நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்