உங்கள் ஜாதகத்தில் சினிமா யோகம் இருக்கிறதா?

முழுக்க முழுக்க அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிஜிடல் இந்தியா என்பதன் பொருளே அதுதான். இந்த கால கட்டத்தில் இதற்கு காரகத்துவம் வகிக்கும் இரண்டு கிரகங்கள் சந்திரனும் சனியும் ஆகும்.

கால புருஷ தத்துவப்படி, முதல் ராசி மேஷம் என்றால், கடகம் நான்காவது ராசியாகும். கடகத்திற்கு அதிபதி சந்திரன் ஆகும். நான்காம் பாவம் என்பது சுகஸ்தானம் ஆகும். தாயார், வீடு, மனை, வாகனம், கல்வி போன்றவற்றை இந்த நான்காம் பாவம் குறிக்கும்.

இந்த நான்காம் பாவமான சுக ஸ்தானத்திற்கு உரிய சந்திரனுக்கு, சனியின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், அது புனர்பூ தோஷம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் தாயாரின் அன்பு, வீடு, மனை, வாகனம், கல்வி, இல்லற வாழ்வில் வெறுப்பு போன்றவற்றை சந்திக்க நேரும் என்று பலரும் கூறுகிறார்கள்.

புனர்பூ என்றால் மறுபடியும் மலர்வது என்று பொருள். எனவே சந்திரன் சனி தொடர்புள்ள ஜாதகர்கள், எப்போதோ நடந்த உரையாடல் மற்றும் நிகழ்வுகளை, திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் நினைவு கூறும் தன்மை கொண்டவர்களாக திகழ்வார்கள்.

சாதாரணமாகவே சனி எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த கிரகத்தின் தன்மை பாதிக்கப்படும் என்பது பொதுவான விதியாகும். ஆனால், மறுபக்கம் அது தரும்யோகங்களையும் பார்க்க வேண்டும்.

குறிப்பாக சந்திரன் சனி சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை உள்ள ஜாதகர்கள் பலரும், சினிமா, சின்னத்திரை, காட்சி ஊடகம், ஒலி-ஒளி, மென்பொருள் துறை, குளிர்பானங்கள், மதுபானம், இயற்கை விவசாயம், குழாய் சம்பந்தப்பட்ட துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

சினிமா அல்லது சின்னத்திரை சார்ந்த பலரது ஜாதகத்தை வாங்கி ஆய்வு செய்தால், அதில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து பேருக்கு இந்த சனி சந்திரன் சேர்க்கை, பார்வை அல்லது பரிவர்த்தனை இருக்கும்.

எனவே, கம்ப்யூட்டர், மென் பொருள், சினிமா, சின்னத்திரை, காட்சி ஊடகம், குளிர்பானம், மதுபானம், பார் ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் அனைவருக்கும் இந்த சந்திரன் – சனி தொடர்பு ஏதாவது ஒரு வகையில் இருக்கவே செய்கிறது. குடிபோதையில் திளைப்பவர்களுக்கும் இந்த இணைவே காரணமாகிறது.

சினிமா அல்லது சின்ன திரையில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் நபர்களின் ஜாதகத்தை பார்த்தால், சந்திரன் வீட்டில் சனி அல்லது சனி வீட்டில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி அல்லது சனி நட்சத்திரத்தில் சந்திரன், லக்னத்திற்கு முன்னும் பின்னும் சனி சந்திரன் அல்லது சந்திரன் சனி, ஒரே ராசி வீடுகளில் சந்திரன் சனி, சந்திரன் சனி பரிவர்த்தனை, ராகு கேது பிடிக்கு வெளியே சந்திரன் சனி போன்ற ஏதாவது ஒரு இணைவை பார்க்க முடியும்.

ஹோட்டல்களில் சாப்பிட்ட உணவுக்கு பில் போடுவதற்கு கூட இன்று கம்ப்யூட்டரே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல, ரயில் டிக்கட், பஸ் டிக்கட் என அனைத்து துறைகளுமே கணிப்பொறி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்திரன் சனி இணைவே உலகை வழி நடத்துகிறது என்பதை மறந்து விட கூடாது.

மேலும், குளிர்பானங்கள், மது பானங்கள், மதுக்கடை பார் நடத்துபவர்கள், அதில் பணி புரிபவர்கள் என அனைத்துக்குமே சந்திரன் சனியே காரகத்துவம் வகிக்கின்றன.

ஆகவே சந்திரன் சனி இணைவை குடும்பம் மற்றும் திருமண வாழ்வை பாதிக்கும் வெறும் புனர்பு தோஷமாக மட்டுமே இன்று பார்க்க முடியாது. குடும்பம் என்று வந்து விட்டால், பிரச்சினை என ஏதாவது ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

அதற்காக சந்திரன் சனி தோஷம் உள்ளவர்கள் அனைவருக்கும் குடும்ப வாழ்வு, திருமண வாழ்வு பாதிக்கப்படும் என்று கூறுவது அவ்வளவு ஏற்புடையது அல்ல.

சினிமா ஸ்கிரீன் மட்டுமல்ல கம்ப்யூட்டர் ஸ்கிரீன் என எந்த ஸ்கிரீன் அதாவது “திரை” வந்தாலும், அங்கே சந்திரன் சனி தொடர்பு தாமாகவே வந்து விடும். சந்திரன் சனி இணைவுக்கு கிடைக்கும் மற்ற கிரகங்களின் தொடர்புக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட துறையில் உட்பிரிவுகள் அமையும்.

எனவே சினிமா மற்றும் சின்னத்திரை யோகத்தை வழங்கும் சந்திரன் சனி  தொடர்பை வெறும் புனர்பூ தோஷம் என்று ஒதுக்கி விடும் காலகட்டம் இதுவல்ல. ஏனென்றால் இது டிஜிட்டல் உலகம்.