நடிகர் விஜய் – ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இணைந்து அரசியல் கட்சி தொடங்குகிறார்களா?

சென்னை துரைப்பாக்கத்தில் நடந்த மக்கள் பாதை முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய, இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், அந்த அமைப்பின் காப்பாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தையும் வெகுவாகப் பாராட்டி பேசினார்.

இதையடுத்து, மக்கள் மத்தியில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயமும், நடிகர் விஜயும் இணைந்து அரசியல் கட்சி தொடங்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் பாதை என்ற அமைப்பின் காப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த அமைப்பின் முப்பெரும் விழா, சென்னை துரைப்பாக்கத்தில் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு, நேர்மையாளர் விருது வழங்கப்பட்டது.

 விழாவில் பேசிய நடிகர் விஜயின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர், சகாயத்தை வெகுவாக பாராட்டினார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மாறமாட்டார்கள்.

அதனால், இளைஞர்கள் தான் மாற வேண்டும் என்றும் வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல தலைவர் கிடைப்பார் என்றும் அவர் பேசினார்.

இதனால், நடிகர் விஜய்யும் சகாயமும் வருங்காலத்தில் அரசியலில் கைகோர்ப்பார்கள் என்ற யூகம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் பிரபலமான  ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். அதனால் இளைஞர்களுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.

அதிலும் பல ஆயிரம் கோடி கிராணைட் முறைகேடு தொடர்பான விசாரணையில், சுடுகாட்டில் படுத்து விசாரித்தது சகாயம் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியது.

அத்துடன், சகாயம் தனது நேர்மையாலும் அவ்வப்போது அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பதிலும் உறுதியாக இருந்துள்ளார்

இந்நிலையில், மக்கள் பாதை அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான முன்னெடுப்பாக அந்த அமைப்பில் மாணவரணி, வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனங்கள் நடைபெற்றன.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சினிமாவிலும், பொதுத் தளத்திலும் ஆளும் கட்சிகளையும் தமிழக அரசியலையும் விமர்சனம் செய்து வருகிறார். நேர்மையான அரசியல், நிர்வாகம் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

இதனால், பெரிய அளவில் ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய் அரசிலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல,  ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமும் நேர்மையான அரசியலும் நேர்மையான நிர்வாகமும் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சகாயத்தின் மக்கள் பாதை அமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் விஜய்யும் சகாயமும் அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.