கேரள இடைத்தேர்தல்: தலைதூக்கும் ஜாதி அரசியல்!

தமிழகத்தில் இன்று இரு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலைப் போலவே, கேரளத்தில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வட்டியூர் காவு, அரூர், கோனி, எர்ணாகுளம், மஞ்சீஸ்வரம் ஆகிய ஐந்து தொகுதிகளில் நடக்கும் இந்த இடைத்தேர்தலில்தான் ஜாதி அரசியல் வெளியில் தெரிய வந்துள்ளது.

இதில் ஈழவர், நாயர் சமூகத்தின் இடையேயான அரசியல் ஒவ்வொரு தொகுதியிலும் தலைதூக்கி நிற்கிறது.

சபரிமலை விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தபோது, அதை பாரதிய ஜனதா கட்சியால் அறுவடை செய்யமுடியாமல், காங்கிரஸ் கட்சியே அறுவடை செய்தது.

ஆனால் சமீபத்தில் நடந்த பாலா சட்டமன்ற இடைத்தேர்தலில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல், காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த தொகுதியை இடது சாரிகள் கைப்பற்றி விட்டனர்.

ஆனால், நூறாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தலையிடாமல் இருந்த நாயர் சமூகத்தின் அமைப்பான என்எஸ்எஸ்,, திடீரென களத்தில் குதித்து, சபரிமலை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்த இடதுசாரிகளுக்கு, தேர்தல் முடிவை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அறிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பினராயி விஜயனின் சமூகமான ஈழவர் சமூகத்தின் எஸ்என்டிபி அமைப்பு, கேரளாவில் எப்போதெல்லாம் ஈழவர் ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம், என்எஸ்எஸ் அமைப்புக்கு இதே வேலையாகி விட்டது. இது சி.ஆர்.சங்கரன் காலத்தில் இருந்தே நடக்கிறது என்று கூறி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கேரளா அரசியலில், தற்போது, ஜாதி அரசியல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இது, அம்மாநில அரசியலில் மேலும் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறதோ? என்ற அச்சம் நிலவுகிறது.