மக்கள் கொண்டாடும் மாவட்ட கலெக்டர்: அதிகாரிகளை தெறிக்கவிடும் வாட்ஸ் அப் ஆடியோ!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கந்தசாமி, மக்களின் அன்புக்கும் சேவைக்கும் பாத்திரமாக விளங்கி வருகிறார். இவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைள் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது.

கீழ்பென்னாத்தூர் வட்டம்,  வேடநத்தத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் – பூங்காவனம் தம்பதியருக்கு இரு மகன்கள். இரு மகன்களுக்கு தமது சொத்து ஐந்து ஏக்கரையும் பிரித்து கொடுத்துள்ளனர்.

நிலத்தை பெற்றுக்கொண்ட மகன்கள், பெற்றவர்களுக்கு சோறு போடாமல் விரட்டி அடித்துள்ளனர். இதனால், ஒரு அறுபது சென்ட் நிலம் கொடுங்கள், நாங்கள் இருக்கும் வரை அதில் விவசாயம் செய்து பிழைத்து கொள்கிறோம் என்று மகன்களிடம் மன்றாடி உள்ளனர்.

அதற்கு இரு மகன்களும் மறுக்கவே, வேறு வழியின்றி, மாவட்ட ஆட்சியர் குறை கேட்பு கூட்டத்தில், அந்த தம்பதியினர் முறையிட்டுள்ளனர்.

உடனே, இரு மகன்களையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார் கலெக்டர் கந்தசாமி. சமரசத்தை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான் செட்டில்மென்ட் செய்த பத்திரப்பதிவுவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றி எழுதப்பட்டது.

இந்த நிலையில் கண்ணனையும் பூங்காவனத்தையும்  அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

அதோடு அவர்களிடம், உங்கள் மகன்கள் ஏதாவது பிரச்சினைகள் செய்தால் உடனே என்னை வந்து பாருங்கள் அல்லது எனக்கு போன் செய்யுங்கள் என்று போன் நம்பரையும் கொடுத்து அனுப்பினார்.

இதேபோல், தண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஏழுமலை – சின்ன பாப்பா தம்பதியரின் மகன் 16 வயது கோவிந்தராஜ் பிறவியிலேயே இதய நோயினால் பாதிப்படைந்தவர்.

அறுவை சிகிச்சை செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாமல், 12 ஆண்டுகளாக, அந்த  குடும்பமே வேதனையில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தத் தகவல், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு வந்துள்ளது.

உடனடியாக, சென்னை அமைந்தகரையில் உள்ள `எம்.ஜி.எம். ஹெல்த் கேர்’ என்ற தனியார் மருத்துவமனையில், தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்வதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வசதியும், அத்துடன், ஏழுமலை குடும்பத்தினரின் செலவுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளார்.

இதுபோல இன்னும் எத்தனையோ சம்பவங்களை சொல்லி, தங்களது மாவட்ட ஆட்சியரை திருவண்ணாமலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆட்சியர் கந்தசாமி, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,

“அனைவருக்கும் வணக்கம், நான் கலெக்டர் பேசுறேன். ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம், மற்ற திட்டங்கள் எல்லாம் தொய்வாக இருக்குதுனு பேசினோம்.

அரசு இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க அதுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கோம். ஏழைகளுக்கான வீடு திட்டங்கள் பற்றி நாம் கடந்தமுறை அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தோம்.

தகுதியுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வீடு ஆகிய டேட்டாக்களை நம் கையில் வைத்திருக்கிறோம். ஆனாலும், ஏன் வீடுகள் ஒதுக்கப்படலைனு அதிக அளவு புகார் வந்துகிட்டே இருக்கு.

இன்றைக்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கு. திங்கள்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம்.

ஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா? என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும்.

திங்கள்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கலைன்னா அன்னைக்கு எத்தனை பேரை வேணும்னாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அது ஒரு பஞ்சாயத்து செயலரோ… அது சம்பந்தப்பட்ட பி.டி.ஓ அல்லது டெபுடி பி.டி.ஓ யாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. எப்படிச் செய்யுறீங்களோ செய்யுங்க. திங்கள்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

நான் மிகவும் சீரியஸாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன். நீங்கள் பண்ணுகிற தவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.

தவறைக் காவல்காப்பவன் நான் கிடையாது. தவற்றை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம்.

அனைத்து பிடிஓவும் பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் மிகவும் தீவிர விஷயமாகக் கருதி முடிக்க வேண்டும்.

திங்கள்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு, பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா, இல்லை வேலை இல்லாமல் போகிறீ்ர்களா? என்பதை முடிவு பண்ணிக்கோங்க.

இந்தச் சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்”  என்று ஆட்சியர் கந்தசாமி  பேசியுள்ளார்.