நாங்குநேரி பணப்பட்டுவாடா விவகாரம்: திமுகவுக்கு எதிராக திரும்பும் தேவேந்திர குல வேளாளர்கள்!

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற, திமுக எம்.எல்.ஏ தாக்கப்பட்ட விவகாரத்தில், 24 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம், தேவேந்திர குல வேளாளர்களை திமுகவிற்கு எதிராக திரும்ப வைத்துள்ளது.

ஆறு பிரிவுகளில் உள்ள தங்கள் சமூக மக்களை, ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க வேண்டும் என்று, அந்த சமுதாய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட, மூலக்கரைபட்டி அருகே உள்ள அம்பலம் என்ற ஊரில், மாரியப்பன் என்பவரது வீட்டில், பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவண குமார், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த இளைஞர்கள், பணப்பட்டுவாடா செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ சரவணகுமாரிடம் வாக்கு வாதம் நடத்தியுள்ளனர்.

இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியதில், எம்.எல்.ஏ மற்றும் பணப்பட்டுவாடா செய்த திமுகவினர் அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப் பட்டனர். அவர்கள் கொண்டு வந்த பணமும் வீசி அடிக்கப்பட்டது.

இதையடுத்து, திமுகவினர் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களை மீட்டு சென்றுள்ளனர். எம்.எல்.ஏ சரவணகுமார், திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர்கள் வைத்திருந்த ரூ.2.78 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 24 இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்,, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியான முறையில், கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து, எங்களது போராட்டத்தை அமைதியாக நடத்தி வருகிறோம்.

இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்யும் வகையில், தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தில் நுழைந்து, தேர்தல் ஆணைய விதி முறைகளுக்கு எதிராக பணப்பட்டுவாடா செய்தது திமுக எம்.எல்.ஏ.

அதை நாங்கள் தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய பணியை செய்திருக்கிறோம்.

நிலைமை இப்படி இருக்க, திமுகவினர் புகார் அளித்ததன் பேரில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 24 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

இதனால், இனி தென் தமிழகத்தில் ஸ்டாலின் கட்சி நடத்த முடியாது என்றும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாங்குநேரி தொகுதியில், அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.

அதைத்தொடர்ந்து, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை சந்தித்து, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு, வேட்பாளர் ரூபி மனோகரன் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில், தேவேந்திர குல வேளாள இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு சற்று பாதிப்பு என்றே காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் கூறுகின்றனர்.