அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருந்தால் உரிய நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்து விட்டு, திமுக தலைவர் டுவிட்டரில் தெரிவித்த பாராட்டுக்கு, முரசொலிக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தால் பாராட்டு என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதில் கூறி இருந்தார்.

இதையடுத்து, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம் என்று நிரூபிக்கா விட்டால், ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா? என்று ஸ்டாலின் சவால் விடுத்து இருந்தார். அத்துடன், முரசொலி அலுவலக நிலம் தொடர்பான ஆவணங்களையும் அதில் இணைத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால், அது குறித்து முறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அசுரன் திரைப்படத்தில் உள்ள நில அபகரிப்பு சார்ந்த கதைகள் அனைத்தும் திமுகவுக்கே பொருந்தும், என குற்றம்சாட்டிய அவர்,  மு.க.ஸ்டாலின், அத்திரைப்படத்தில் வரும் வில்லன் வடக்கூரானை போன்றவர் என்றார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது

ஏழு  பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.