இடைத்தேர்தல்: தலைவர்களின் இறுதி கட்ட பிரச்சாரம்!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், நேற்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.

விக்கிரவாண்டியில் திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்களது பிரச்சாரத்தை முடித்தனர்.

நாங்குநேரி தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமது இறுதி கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.

இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்ததையடுத்து, வெளியூரில் இருந்து விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்த, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஒரே நாளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், தொகுதி முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டு இருந்தது.

இருவரில் யாருக்கு அதிக கூட்டம் சேருகிறது என்பதில் போட்டா போட்டி இருந்ததால், திமுக- அதிமுக என இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு கூட்டத்தை அதிகம் காட்டின.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ததில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.

விஜயகாந்த் தொகுதியின் நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்தார். நான்கு இடங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தை காட்டி இருந்தார், அமைச்சர் சி.வி.சண்முகம். விஜயகாந்த் அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலினும் நான்கைந்து இடங்களில் தேர்தல் பிரச்சாராம் செய்தார். எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பதினைந்து ஆண்டுகள் பின்தங்கிய சூழ்நிலைக்கு போய்விட்டது.

இதனை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலக்கட்டத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கவுள்ளார்கள் என்று கூறி தமது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. ஆவிகளை விரட்டி அடிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு என்று எடப்படியின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்துவிட்டு தமது பிரச்சாரத்தை இறுதி செய்தார்.