மத்திய அமைச்சரா? துணை முதல்வரா?: பன்னீரை தெறிக்கவிட்ட எடப்பாடி!

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது உங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டுமா? என்று பன்னீரை பதைபதைக்க வைத்து விட்டார் முதல்வர் எடப்பாடி என்று சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.பி ஆனார்.

இதையடுத்து, தமக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று, பன்னீரை அவரது மகன் ரவீந்திரநாத் நச்சரித்து வருகிறார்.

அதிமுக கூட்டணி கட்சி என்பதால், அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி தருவதற்கும் பாஜக சம்மதம் தெரிவித்தது.

ஆனால், வைத்திலிங்கம் போன்ற சீனியர்கள் இருக்கும்போது, பன்னீர் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அது கட்சியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று, வேண்டாம் என்று அதிமுக கூறி விட்டது.

எனினும், மகனின் நச்சரிப்பு பன்னீரால் தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், தனக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தரவில்லை என்றால், பாஜகவில் சேர்ந்து விடுவதாகவும் ரவீந்திரநாத் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

வேறு வழியின்றி, இது குறித்து முதல்வர் எடப்பாடியிடம், துணை முதல்வர் பேசி இருக்கிறார்.

அப்போது, உங்கள் மகன் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் அமைச்சர் மற்றும், துணை முதல்வர் பதவியை துறக்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி நேரடியாக கூறியதாக தகவல்.

இதனால், அதிர்ந்து போன, பன்னீர், இது எங்கே முதலுக்கே மோசமாகி விடும் என்ற அச்சத்தில், கொஞ்ச காலம் பொறுமையாக இருந்துள்ளார்.

இருந்தாலும், கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து எடப்பாடியின் ஆதிக்கம் பெருகி வருவதால், என்ன செய்வது என்று யோசித்த பன்னீர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து, கட்சியின் பொதுக்குழு நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று பேட்டி ஒன்றில் கூறினார்.

இது, கட்சிக்குள் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும், எடப்பாடியின் அதிகாரம் மற்றும் செல்வாக்குக்கு ஈடு கொடுக்க முடியாமல், அடுத்து என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் பன்னீர் மூழ்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.