முரசொலி அலுவலகத்தின் நிலப்பதிவு ஆவணங்கள் – மூல பத்திரங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, வன்னியர் வாக்குகளை கவருவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் அவருக்கும் இடையேயான அறிக்கை போர் இன்று வரை ஓயவில்லை.

இந்நிலையில், தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் அதை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அசுரன் திரைப்படம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்று கூறி இருந்தார்.

அதற்கு,முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று மருத்துவர் ராமதாஸ் கூறினார்.

இதையடுத்து, முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?,” என சவால் விடுத்த ஸ்டாலின், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் அதில் இணைத்திருந்தார்.

இந்நிலையில்,  அதற்கு பதில் தெரிவித்துள்ள ராமதாஸ், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985 ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது, உண்மை விளம்பி ஸ்டாலினுக்குத் தெரியுமா?

முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழுநேரத் தொழில்தானே? ஆதவற்றோர் இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை என, ராமதாஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.