ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்காமல் விடாது: ஸ்டாலினை அச்சுறுத்தும் எடப்பாடி!

பொய் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி யுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி, திமுக தொடர்ந்த வழக்கினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்று கூறினார்.

ஜெயலலிதாவை வசை பாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது  ஆன்மாவே பழி வாங்கி உள்ளது. தற்போது பொய் பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினையும் அவரது ஆன்மா பழி வாங்காமல் விடாது என்றும் கூறினார்.

மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. மக்களின் தேவைகளை அறிந்து, தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், என்ன பேச வேண்டும் என்றே தெரியாமலே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.

மக்களின் குறைகளை கேட்க திண்ணை பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோல திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது. திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார்.

ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது. தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்றும் எடப்பாடி கூறினார்.