ஸ்டாலின் – எடப்பாடியின் தனிப்பட்ட விமர்சனங்கள்: திசை மாறும் தேர்தல் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடியும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து கொள்வதால், தேர்தல் பிரச்சாரம் திசைமாறி போகிறதா? என்ற அச்சம் நடுநிலையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் என்னென்ன தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். என்னென்ன குறைகளை களைய வேண்டும் என்பதை ஒட்டியே தேர்தல் பிரச்சாரம் இருக்க வேண்டும்.

சிலநேரங்களில் கொள்கை ரீதியான விமர்சனங்களும், ஆட்சியில் உள்ள குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்படும். இதுவே, ஆரோக்கியமான விமர்சனமாக இருக்க முடியும்.

இவ்வளவுநாள், எதுவும் பேசாமல் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, அந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்குகளை குறிவைத்து, ஆட்சிக்கு வந்தால் சில சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு, அதிமுக கூட்டணி கட்சியான பாமக வெளியிட்ட அறிக்கை, கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சார லிஸ்டிலேயே இல்லாத ராமதாஸ், பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

அடுத்து, முதல்வர் எடப்பாடியை மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல, சசிகலா காலில் விழுந்து முதல்வர் ஆனார் என்று ஸ்டாலின் பேசினார்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி, 122 எம்.எல்.ஏ க்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என்று கூறினார். மேலும் சுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்திற்கு கணக்கு இருக்கிறது.

தற்போது கணக்கு பட்டியல் பிரதமர் கையில் இருப்பதால், விரைவில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.

சுவிஸ் வங்கியில் எனக்கு கணக்கு இருப்பதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே ஒதுங்கி விடுகிறேன். இல்லை என்றால், நீங்கள் ஊரை விட்டு வெளியேறுகிறீர்களா? என்று எடப்பாடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விட்டார்.

இதற்கு பின்னரும், நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது ஒரு தொகுதியில் நில்லுங்கள், நானும் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் உங்களை எதிர்த்து நிற்கிறேன். அப்போது யார் வெற்றி பெறுகிறார்கள், யார் மக்கள் முதல்வர் என்று அறியலாம் என்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவின் 48 வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு பின்னர், ஸ்டாலினின் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ஸ்டாலின் இப்போது குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார்.

அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. ராஜினாமா செய்ய தயாரா? போட்டியிட தயாரா? பொறுப்பேற்க தயாரா? என்றுதான் கேட்டு வருகிறார். 2021 ல் தேர்தல் வரப்போகிறது. அப்போது தெரிந்துவிடும் அல்லவா என்றார்.

மக்கள்தான் சிறந்த நீதிபதி, மக்கள் தீர்மானிக்கும் விஷயத்திற்கு இவர் ஏன் அவசரப்பட வேண்டும். அதுவரை கூட போருக்க முடியாமல், தூங்க முடியாமல் பதவி வெறி ஸ்டாலினை பாடாய் படுத்துகிறது என்றும் கூறினார்.

இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார் என்று கூறினார்.