இந்தியாவில் பசுக்களின் எண்ணிக்கை 18  சதவீதம் அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்!

நாட்டில் உள்ள பசுமாடுகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 2012-ல் இருந்ததை விட தற்போது 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

20-வது கால்நடை கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கால்நடைகள், எருமைகள், காட்டெருமைகள், காட்டெருதுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், பன்றிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், நாய்கள், முயல்கள் மற்றும் யானைகள், மற்றும் கோழிகள், வாத்துகள், ஈமுக்கள், வான்கோழிகள், காடைகள் மற்றும் பிற கோழிகள் ஆகியவை கணக்கிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2019 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 192.49 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மாடுகளின் எண்ணிக்கை மட்டும் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளை 2012 ஐ ஒப்பிடும்போது 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் பசுக்களின் தொகை 145.12 மில்லியன் ஆகும். இது 2012 ல் எடுக்கப்பட்ட  முந்தைய கணக்கெடுப்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

பசுக்கள் மற்றும் எருமைகள் உட்பட மொத்தமாக  பால் வழங்கும் கால்நடைகள் 125.34 மில்லியன் ஆகும். இது முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது.