சென்னை மாகராட்சியில் போட்டியிட பாஜக ஆயத்தம் – வேட்பாளர் ரெடி: அதிமுகவின் நிலை என்ன?

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, தமிழக உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளன.

இந்த தேர்தலில் வாக்காளர்களே ஓட்டுப்போட்டு மேயரை நேரடியாக தேர்வு செய்யும் முறையே நடைமுறைப்படுத்த உள்ளது.

அதனால், சென்னை மாநகராட்சியை பாஜகவுக்கு ஒதுக்குமாறு அதிமுகவிடம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில், சென்னை மாநகராட்சியை அக்கட்சிக்கு ஒதுக்குவதை தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லை.

எனவே பாஜக கண்டிப்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே சொல்லப்படுகிறது.

சென்னை மேயர் வேட்பாளராக, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரும், அவர் சென்னை வரும்போதெல்லாம், அவருடைய நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒருங்கிணைத்து மோடியின் பாராட்டை பெற்றவருமான பிரித்வி என்பவர் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியிலேயே திமுகவில்  நிற்பதற்கு முன்மொழியப்பட்டவரான ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதியை, சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்துவதற்கான நகர்வுகளும் திமுகவில் தொடங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால், சென்னை மாநகர மேயர் தேர்தல் என்பது, திமுக – பாஜகவுக்கு இடையேயான போட்டியாகத்தான் இருக்கும் என்பதே இப்போதைய நிலை.

எனினும், உதயநிதிதான் வேட்பாளரா? அல்லது சூழ்நிலையை பொறுத்து வேட்பாளர் தேர்வில் மாற்றம் வருமா? என்பது குறித்து திமுகவில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

எப்படி இருந்தாலும், பிரதமர் தலையீட்டால், சென்னை மேயர் தேர்தலில் அதிமுக நிற்பது என்பது அவ்வளது எளிதல்ல என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தமிழகத்தில் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எந்த பிரதிநிதித்துவமும் இல்லாத பாஜக, தலைநகரான சென்னையில் தனக்கான வலுவான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறது.

அதற்கு உள்ளாட்சி தேர்தலே சிறந்த வழி என்றும் அக்கட்சி நினைக்கிறது. அதையும் மீறி திமுகவில் உதயநிதி போன்ற வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், அதற்காக சில கோப்புகளும் தயார் நிலையிலேயே பாஜக வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முடிவு என்னாகும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.