ராமதாஸ் அன்புமணி அரசியலை விட்டு விலக தயாரா? ஸ்டாலின் சவால்!

முரசொலி இடம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்பதை நிரூபிக்காவிட்டால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலின், தூத்துக்குடி திரை அரங்கம் ஒன்றில் இந்தப்படத்தை பார்த்தார்.

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஸ்டாலின், “அசுரன் – படம் மட்டும் அல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்,” எனப் பதிவிட்டார்.

ஸ்டாலின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமது  ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா, அற்புதம். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!,” எனப் பதிவிட்டிருந்தார்.

இதனால் கொதிப்படைந்த  ஸ்டாலின், இன்று  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராமதாசுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில், “ராமதாஸ், தற்போது முரசொலி அலுவலகம் இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் பொய் சொல்லியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

எனவே, நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!

அதே சமயம், அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?,” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமது டுவிட்டர் பதிவுடன் முரசொலி அலுவலகத்துக்கான நில அளவீடு செய்து வழங்கப்பட்ட சான்றிதழுக்கான ஆதாரத்தையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.