மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இல்லையா? காரணம் என்ன?

எதிரி மீது நாம் விமர்சனக் கணைகளை வீசும் போது, எதிர் தரப்பில் இருந்தும் நம் மீது சில கணைகள் வீசப்படும். அப்படி ஒரு கணைதான் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மீது விழுந்திருக்கிறது.

நெருக்கடி நிலை என்னும் மிசா காலத்தில், தமிழகத்தில் திமுகவை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இதில் இன்றைய திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர்.

மிசா நடைமுறையில் இருந்த போது, ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால், மிசா வழக்கில் இல்லை. ஷா கமிஷன் அறிக்கையிலும் ஸ்டாலின் பெயர் இல்லை என்று, தொலைகாட்சி விவாதம் ஒன்றின் நடுவர், பொன்முடியிடம் கேட்க, அப்போது அவரால், சரியான பதில் சொல்ல முடியவில்லை.

இதையடுத்து, வேறு பிரச்சினைகளுக்காக ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிசா காலத்தில் அதற்காக கைது செய்யப்பட்டாரே ஒழிய மிசா கைதியாக அல்ல என்று அதிமுக, நாம் தமிழர் போன்ற எதிர்தரப்பில் கருத்துக்கள் வலம் வரத்தொடங்கின.

உண்மையில், ஸ்டாலினின் அரசியல் வரலாற்றை எழுத வேண்டுமானால், அவரை மிசா கைதியாகத்தான் முதலில் அறிமுகப்படுத்த வேண்டி இருக்கும்.

உண்மையில், ஸ்டாலின்  மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்தான், ஆனால் மிசா கைதியாக அல்ல என்றே எதிர் தரப்புகள் கூறுகின்றன?

அப்படி என்றால், அவர் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும்? என்ற ஒரு கேள்வியும் எழும். ஆனால், மிசாவில் ஒருவரை கைது செய்ய காரணம் தேவை இல்லை என்பதும் உண்மைதான்.

எனினும், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பதுதான் இந்த சர்ச்சையை மேலும் கூட்டுகிறது.

மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய கமிஷன் ரிப்போர்டை தமிழில் தொகுத்தவர் இரா.செழியன், அப்படி இருக்கும்போது, ஸ்டாலின் பெயர் அதில் எப்படி விடுபடும்.

அதை, தொலைகாட்சி நெறியாளர் பொன்முடியிடம் கேட்டபோது, அதை நான் படித்ததில்லை, இப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்று கூறினார் பொன்முடி.

அதற்கு பிறகுதான், அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை இந்த விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக பேச ஆரம்பித்தன.

இந்நிலையில், திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஊடகம் நடத்துபவர்களும், அதில் பணிபுரிபவர்களும் வரலாறுகளை தெளிவாக படித்து விட்டு விவாதிக்க வேண்டும்.

அதைவிட்டு, யாரையோ திருப்தி படுத்துவதற்காக, இதுபோன்ற அரை குறை விவரங்களை வைத்துக் கொண்டு விவாதிக்க கூடாது.

இந்த விவகாரத்தில், தேவையான விவரங்கள், கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி போன்ற நூல்களில் தெளிவாக விளக்கங்கள் உள்ளன என்று கூறி உள்ளார்.

அதேபோல், விவரங்களை தெளிவாக பேச தெரிந்தவர்களை மட்டுமே ஊடக நிகழ்ச்சிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதையும் கட்சிகள் பின்பற்ற வேண்டும் அல்லவா?

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், மாவட்ட செயலாளர் பொன்முடிக்கான முக்கியத்தும் குறைந்து, மற்றொரு மாவட்ட செயலாளர் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளும் அவருக்கு நெருக்கடியை தந்துள்ளன.

உண்மையில் திமுக தலைவருக்கு சூழல் சரியில்லையா? அல்லது பொன்முடிக்கு நேரம் சரி இல்லையா? என்பது, தேர்தல் முடிவுகளுக்கு பின்பே தெரியவரும்.