சீமானின் ஆவேச பேச்சு சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலையை பாதிக்கும்: கி.வீரமணி!

ராஜிவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய பேச்சு, கடந்த இருபத்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும் ஏழு தமிழர்களின் வாழ்வை பாதிக்கும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டியில் கடந்த 13-ம் தேதி, நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்” என்று பேசினார்.

இது நீண்டகாலமாக சிறையில் துன்பம் அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலையை பாதிக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட சீமான் பேச்சு பயன்படும்.

ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று விடுதலைப் புலிகள் சொல்லவில்லை. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாக இவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள், உண்மையாக விடுதலைப் புலிகளோடு பழகியவர்கள் அல்ல. விடுதலைப் புலிகளோடு படம் எடுத்துக்கொண்டு, அரசியல் நடத்தக் கூடியவர்கள். அதற்குமேல் சொல்லவேண்டிய அவசியமில்லை.

எனவே, மனிதநேய அடிப்படையில் பார்க்கும்போது, எந்த ஒரு தலைவரையும் கொல்லுவது என்பது அவருடைய கருத்தை வெல்வதாகாது. ஆகவே, நாங்கள்தான் கொன்றோம் என்று சொல்லலாமா? இவருக்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இது அவருக்குக் களங்கம் என்பதைவிட, விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கும் இது மிகப்பெரிய பின்வாங்கல்.

ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கு மட்டும் இது பின்வாங்கல் அல்ல. ஏழு தமிழர்கள் விடுதலையாக வேண்டும். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை, நாங்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு, சீமான் பேச்சு எந்த அளவிற்கு உதவும்?

தேவையற்ற இதுபோன்ற பேச்சுகளை சீமான் பேசி, அதன்மூலமாக தான் பெரிய தலைவராக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. தமிழ்நாட்டில் தலைவராகலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால், இதுபோன்ற குறுக்கு வழியில், பரபரப்புக்காக பேசுவது தேவையற்றது.

ஈழத் தமிழர்களுடைய வாழ்வு மீண்டும் மலரவேண்டிய ஒன்றாகும். ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. குற்றமற்றவர்கள் அவர்கள் என்று எல்லோரும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாக ஆக்குவதற்கு இந்தப் பேச்சு பயன்படுமே தவிர, ஏழு தமிழர்கள் விடுதலைக்குத் தடையாக இருக்குமே தவிர, வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. உண்மைக்கும், இவருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் ஏமாளிகள் அல்ல. யாராவது அவரைப் பற்றி புரிந்துகொள்ளாதவர்களுக்கு அவர் கொடுத்த விளக்கத்தின் மூலமாக அவரை சரியாகப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பாகும் என்றும் வீரமணி கூறினார்.