நான் அரசியலை விட்டு விலக தயார் – எடப்பாடி ஊரைவிட்டு  வெளியேற தயாரா? ஸ்டாலின் அதிரடி சவால்!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் , அதிமுக – திமுக வுக்கு இடையே எழுந்த அரசியல் வாக்கு வாதங்கள், தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விமர்சனங்களும், சவால்களுமாக மாறி வருகின்றன.

நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி, வசந்தகுமாரின் பேராசையால் இங்கு இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது என்றார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவருக்கு, தேர்தல் வந்தால்தான் திண்ணை ஞாபகம் வருகிறது என்று குறிப்பிட்டார். அவர் பொது மக்களிடம் மனுக்களை வாங்கி ஏமாற்றுகிறார் என்றும் கூறினார்.

மேலும் சுவிஸ் வங்கியில் ஸ்டாலின் குடும்பத்தினர் பணம் போட்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். தற்போதய பிரதமர், யார் யாரெல்லாம் கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்துள்ளார்கள் என்ற பட்டியலை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் திமுக இடம்பெற்றுள்ளதாக தகவல்.

மேலும், எங்களை ஏன்? வெளிநாடு செல்கிறீர்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். உங்களைப்போல கொள்ளை அடித்த பணத்தில், வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்காக செல்லவில்லை என்றும் எடப்பாடி கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின், எனக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலக தயார். அப்படி நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் ஊரை விட்டு வெளியேற தயாரா? என்று எடப்பாடிக்கு சவால் விடுத்தார்.

நான் வெளிநாடு செல்வது, தனிப்பட்ட விஷயம். நீங்கள் முதல்வராக வெளிநாடு செல்வது அரசு சார்ந்த விஷயம். அப்படி நீங்கள் முதலீடு திரட்ட வெளிநாடு சென்றால், அவ்வாறு முதலீடு திரட்டிய விவரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை வெளியிடுங்கள்.

நான் மேயராக, அமெரிக்காவில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றேன். ஜப்பான் சென்றேன், அதன்மூலம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் நிதி பெற்று வந்தேன்.

எட்டு ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருக்கிறீர்கள். நான் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதை நிரூபியுங்கள். உங்களுக்கு இணக்கமான அரசுதானே மத்தியில் இருக்கிறது. அவர்களிடம் ஆதாரம் காட்ட சொல்லுங்கள்,

உங்கள் குற்றச்சாட்டை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால், நீங்கள் ஊரை விட்டு வெளியேற தயாரா? என்று முதல்வர் எடப்பாடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும், நாங்கள் பொதுமக்களிடம் இருந்து பெரும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். மேலும், திமுக ஆட்சிக்கு வரும்போது, இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் ஸ்டாலின் கூறினார்.