கல்கி ஆசிரமத்தில் வருமானவரி சோதனை: பலகோடி ரூபாய் பணம்-முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அதனோடு தொடர்புடைய 40  இடங்களில் வருமானவரி துறை அதிகார்கள் நடத்திய சோதனையில், பல கோடி ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களுக்கு சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்கி ஆசிரமத்தை நிறுவியவர் விஜயகுமார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் இவரது சொந்த ஊர். இவருக்கு சிறு வயதாக இருக்கும்போதே இவரது குடும்பம் சென்னைக்கு குடியேறி விட்டது.

சென்னையிலேயே பட்டப்படிப்பு வரை முடித்த இவர், சில காலம் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றினார். பின்னர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜுபேட்டையில் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.

அதுவே, கல்கி ஆசிரமமாக உருவானது. அதையடுத்து சில காலம் வெளியில் தெரியாமல் இருந்த அவர், திடீரென நான்தான், விஷ்ணுவின் கல்கி அவதாரம் என்று தன்னை தானே கூறிக்கொண்டார்.

அவரை காண மக்கள் அலைமோதினர். ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவருக்கு பக்தர்கள் பெருகினர். அவருக்கும் அவரது மனைவிக்கும் பூஜை செய்ய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பணத்தை தினம் தினம் கொண்டு வந்து கொட்டினர்.

அதன் தொடர்ச்சியாக,  சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே பல கோடி செலவில் ‘கோல்டன் ஹவுஸ்’ எனும் பெயரில் பிரம்மாண்டமான ஆசிரமத்தை விஜயகுமார் நிறுவினார். மேலும், ஆசிரமங்கள் நிறுவனங்கள் என அவரது செல்வாக்கு பல்கி பெருகியது.

இந்நிலையில், வருமானவரி ஏய்ப்பு, பணப்பரிவர்த்தனை மோசடி தொடர்பாக அவரது ஆசிரமங்கள் மீது புகார் எழுந்தது. அதனால், கல்கி ஆசிரமம், மற்றும் அதோடு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மேலும், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, ஆசிரம தலைமை பொறுப்பில் உள்ள லோகேஷ் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஒரே சமயத்தில் 4 குழுக்களாக பிரிந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் பணமும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக்  கூறப்படுகிறது.