போராட்டத்தில் 21 வன்னியர்கள் உயிரிழந்ததற்கு காரணமே திமுதான்: ஸ்டாலினுக்கு ராமதாஸ் வைத்த செக்!

விக்கிரவாண்டி இதைத்தேர்தலையொட்டி, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு, தியாகிகளுக்கும், முன்னாள் அமைச்சர்  கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் என்பன உள்ளிட்ட சலுகைகளை அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

அத்துடன், ஜெகத்ரட்சகன் தலைமையில் இயங்கிவரும் வீரவன்னியர் பேரவை, வன்னிய குல ஷத்திரிய கூட்டமைப்பு சார்பில், ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால், கடும் கோபத்திற்கு ஆளான மருத்துவர் ராமதாஸ், ஸ்டாலின் அறிக்கைக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையும், அதைதொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த அறிக்கை போர்களும், விக்கிரவாண்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியது.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் நேற்று, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து, மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இடஒதுக்கீடு கோரி 1987 ம் ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் 21 வன்னியர்கள் உரிழந்ததற்கு திமுகவே காரணம் என்று கூறினார்.

1987 ம் ஆண்டு, இட ஒதுக்கீடு கோரி, வன்னியர் சங்கள் சார்பில் ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று, திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆறு மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதி விட்டேன்.

ஆனால், அவர் வேண்டுமென்றே, சாலை மறியல் போராட்டம் அறிவித்த தேதியில் திமுகவின் முப்பெரும் விழாவை அறிவித்தார்.

இதன் விளைவாகவே, சாலை மறியல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று 21 வன்னியர்கள் உயிரிழந்தனர். எனவே வன்னியர்களின் உயிரிழப்புக்கு காரணமே திமுகதான்.

1995-ம் ஆண்டு பாமக மாநாடு நடைபெற்றபோது, கருணாநிதிக்கு முதன்முதலாக மஞ்சள் துண்டு அணிவித்தேன். அவர் கடைசி வரை மஞ்சள் துண்டை கழற்றவே இல்லை.

ஆனால், அதைத்தொடர்ந்து வந்த தேர்தலில், எங்களை கழற்றிவிட்டு மூப்பனாருடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இதெல்லாம் அவருக்கு கைவந்த கலை. இதற்காகத்தான், கலைஞர் என்றால் கலைப்பவர் என்று நான் கூறுவேன்.

ஏழுநாள் சாலைமறியல் போராட்டம் நடந்தபோது, முதல்வராக இருந்த எம்ஜிஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து திரும்பி வந்த பின்னர், அவர் என்னை அழைத்து பேசினார்.

அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களிடமும் போராட்டம் குறித்து அறிந்து கோபப்பட்டார். பின்னர் வன்னியர்களுக்கு 13 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் அவர் முக்கிய ஆவணத்தில் எழுதி வைத்தார்.

ஆனால், ஒரு மாதத்தில் அவர் இறந்து விட்டதால், ஒரு மூத்த அமைச்சர் அந்த ஆவணத்தை மறைத்து வைத்து விட்டார் என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

இதன்மூலம், வன்னியர்களை குறிவைத்து வெளியான திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவிப்பு, அதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட  போஸ்டர்கள் என அனைத்துக்கும் மருத்துவர் ராமதாஸ் கடுமையான செக் வைத்துள்ளார் என்று அதிமுக மற்றும் பாமக தரப்பில் கூறுகின்றனர்.