தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்;  தமிழக அரசு அறிவிப்பு!

 தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் போனஸ் விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன்படி, போக்குவரத்து கழகம், மின்வாரியம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும்.

வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10 சதவிகிதமும்,  கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10 சதவிகிதமும்  தீபாவளி போனஸ் வழங்கப்படும்.  நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20 அல்லது 10 சதவிகித போனஸ் வழங்கப்படும்.

இதனால், நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்து 400 ம், அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 800 ம் தீபாவளி போனஸாக வழங்கப்படும்.  போனஸ் வழங்குவதன் மூலம், அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503  பேர் பயன் அடைவார்கள்.

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8 புள்ளி 33 சதவிகிதமும், கருணை தொகை 11 புள்ளி 37 சதவிகிதமும் வழங்கப்படும்.

லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில் கொண்டு 20 சதவிகிதம் போனஸ் தரப்படும்.  நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும் என்றும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.