சசிகலாவின் வருகை: எடப்பாடி – பன்னீர் இடையே தலைதூக்கும்  முரண்பாடு!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வெளியில் வந்ததும், அதிமுகவில் இணைவாரா? என்ற பேச்சு, கடந்த சில நாட்களாகவே அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

ஆனால், அவரை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்பதை, அதிமுகவின் அதிகாரபூர்வமான நாளேடான நமது அம்மாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் பெற்ற கவிதையின் மூலம் பதில் சொல்லப்பட்டிருந்தது.

அதையும் மீறி, சசிகலா அதிமுகவில் இணைவார், ஒன்று பட்ட அதிமுக வலுவாகும் என்று பேச்சுக்கள் தொடர்ந்து  கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சியில் இணைவாரா? என்ற கேள்விக்கு, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் இது குறித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறி உள்ளார்.

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா, மறுத்துள்ள நிலையில், பன்னீர் இவ்வாறு பதில் அளித்திருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்துதான், பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றார். சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன்தான் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அண்மையில் கூட, சசிகலா மீண்டும் கட்சிக்கு வந்தால், கட்சியை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்து விடுவார். அதனால், அவரதுசிறை தண்டனையை குறைக்க கூடாது எனது என்று டெல்லியிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தலைமைக்கழக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவெடுப்பார்கள் என்று அவர் கூறி இருப்பது விந்தையாக உள்ளது.

பன்னீர் முதன்முதலாக எம்.எல்.ஏ ஆனபோதே அமைச்சர் ஆகி தற்காலிக முதல்வராகவும் ஆனார். உண்மையில் தேனி மாவட்டத்தில், செல்வாக்காக இருந்த தங்க தமிழ்செல்வனை ஓரம் கட்டி, பன்னீரை முன்னுக்கு இழுத்து கொண்டு வந்தவர் தினகரன்தான்.

அந்த பழைய ஞாபகத்தில் நன்றிக்கடன் தீர்க்க, மீண்டும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ? என்றும் அதிமுகவில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

முக்கியத்துவம் உள்ள முதல்வர் பதவி இல்லை. கட்சியிலும் எடப்பாடியை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பன்னீர், மீண்டும் தமது செல்வாக்கை மீட்டு எடுக்க சசிகலா தினகரனின் ஆதரவை தேடுகிறாரோ என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் எடப்பாடியோ, கட்சி ஆட்சி என இரண்டிலும் தமது முக்கியத்துவத்தை வலுப்படுத்திக் கொண்டார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பாமகவையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.