எம்ஜிஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்!

சபாபதி படத்தில் வேலைக்காரன் சபாபதியின் நடிப்பை, இந்தத் தலைமுறை மக்கள் கூட இமை கொட்டாமல் ரசிக்கின்றனர். அந்த அளவுக்கு 1936 முதல் 1950 வரை தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த மூத்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் காளி என்.ரத்தினம்.

சிறந்த நடிகர், பாடகர், சண்டை பயிற்சி வாத்தியார், நடிப்பு வாத்தியார்,  அரங்க நிர்வாகி,  பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஆசான் என பல்வேறு சிறப்புக்களைக் கொண்டவர் அவர்.

காளி என். ரத்தினத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள மலையப்பநல்லூர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றிய இவர், கோவலன் என்ற ஒரு நாடகத்தில், முதன் முதலாக காளி வேடம் போட்டார்.  அதில் அவரது நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர். அன்று முதல் அவர் காளி என்.ரத்தினம் என்று அழைக்கப்படலானார்.

அவர், காளி வேடம் கட்டி ஆடினால், அவர் ஆடும் உக்கிரமான ஆட்டத்தைப் பார்த்து பல பேர் சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள்.

பி.யு. சின்னப்பா, எம்.ஜி.ஆர் போன்றவர்களுக்கு உச்சரிப்பு, நுணுக்கமான நடிப்பு, உடல் மொழி, வாள் சண்டை, கத்தி சண்டை, சிலம்பப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் கற்றுக்கொடுத்தவர் காளி என். ரத்தினம்.

தமிழ் சினிமாவில் வாத்தியார் என்றால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிக்கும். ஆனால் எம்.ஜி.ஆரே,  தமது வாத்தியார் காளி என். ரத்தினம் என்று, 1970-ம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய தொடரில் குறிப்பிட்டுள்ளார்

1936-ல் வெளியான பதிபக்தி என்ற படமே காளி என். ரத்தினம் நடித்த முதல் படம். முதல் படத்திலேயே அவர் இரண்டு வேடங்களை ஏற்று அற்புதமாக நடித்திருந்தார்.

அதைதொடர்ந்து, 1950 வரை சந்திரலேகா, பஞ்சாப் கேசரி, உத்தம புத்திரன், சபாபதி, திவான் பகதூர், ஸ்ரீ முருகன், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, ஆண்டாள் உள்பட 5௦ படங்களுக்கும் மேல் பாடி நடித்துள்ளார்.

காளி என். ரத்தினம் போல   ஒரே  காட்சியில் எண்ணற்ற முக பாவனை காட்டக் கூடிய நடிகர் வேறு யாரும் இல்லை என்று மூத்த திரை விமர்சகர்கள் பலராலும் இன்றும் பாராட்டப் படுகிறார்.

என்,எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடியைபோல, அந்தக் காலத்தில், காளி என். ரத்தினம்- சி.டி.ராஜகாந்தம் ஜோடி மிகவும் பிரபலமான ஜோடியாகும்.

காளி என். ரத்தினம் போடாத வேடமும் இல்லை, பாடாத பாடலும் இல்லை என்ற அளவுக்கு அசத்தி இருக்கிறார். கடைசியாக அவர் பொய்க்கால் குதிரை ஆட்டம் போடத் தயாரானபோதுதான், அவரை மரணம் தழுவிக்கொண்டது.

தி இந்து நாளிதழ் கூட  காளி என். ரத்தினம் பாணியைப் பற்றி பல நேரங்களில் சிறப்பாகப் பாராட்டி எழுதி உள்ளது. இளைய தலைமுறையினர் காளி என். ரத்தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காளி என். ரத்தினம் முதல் வரிசை நகைச்சுவை நடிகராக வலம் வந்த 1940 களில், அன்றைய சினிமா பத்திரிகை ஒன்று காளி என். ரத்தினம் பற்றி வெளியிட்ட செய்தியை நட்சத்திர தேடல்கள் என்ற கட்டுரையில், மறைந்த முன்னணி எழுத்தாளர் அறந்தை நாராயணன் பதிவு செய்துள்ளார்.

“ரத்தினம் பழங்கால கிராமிய பழக்க வழக்கங்களுக்கு நல்ல மெருகு கொடுத்து, சினிமா படங்களில் புகுத்தி, பட்டனப்புரங்களில் உள்ள புதுக்கால மனிதர்களும் அவற்றை தெரிந்து கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். கிராம மக்களோ தங்கள் சம்பந்தமான விஷயங்களை சினிமாவில் பார்க்கும்போது பிரமாதமான பூரிப்பு அடைகிறார்கள்.

இந்தக் காரணங்களினாலே அவர்கள் ரத்தினம் நடிக்கும் படங்களைப் பல தடவை பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள்  நிறைய வசூலைப் பெற்று வந்ததற்கு ரத்தினத்தின் நடிப்பு ஒரு முக்கிய காரணமாகும்

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை  பாராட்டி மகிழும்,  மாபெரும் கலைஞன் காளி என். ரத்தினம்,  காலத்தால் மறைக்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் போனதை ஒரு சமூக அவலம் என்றே சொல்ல வேண்டும்.