திமுக அதிமுகவுக்கு கௌரவ பிரச்சினையாக மாறிய விக்கிரவாண்டி: உச்சகட்ட டென்ஷனில் தலைவர்கள்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், திமுகவும்  அதிமுகவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்னவோ விக்ரவாண்டிக்குதான்.

இது ஏற்கனவே திமுகவின் கைவசம் இருந்த தொகுதி. அதுமட்டுமல்ல, உதயசூரியன் சின்னத்தை திமுகவுக்கு வழங்கிய, ஏ.கோவிந்தசாமி நின்று வெற்றி வாகை சூடிய தொகுதி. அதனால், இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக திமுக கடுமையாக போராடி வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமக கூட்டணி இருந்தும் வெற்றி பெறவில்லை என்றால், அக்கட்சியின்  செல்வாக்கு குறைந்து விட்டதாக தோற்றம் உருவாகும். அதனால், விக்ரவாண்டியை கோட்டை விடக் கூடாது என்று போராடுகிறது.

இந்த தொகுதியில் வன்னியர்களின் வாக்கு என்பது கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை நெருங்குகிறது. அதன் காரணமாகவே, வன்னியர்களுக்கு புத்துணர்ச்சி தரும், உள் இட ஒதுக்கீடு, தியாகிகளுக்கு மணிமண்டபம், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் போன்ற கவர்ச்சிகரமான அறிக்கைகளை எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆனால், இதற்கு மருத்துவர் ராமதாஸ் தரப்பில் இருந்து வந்த பதில் அறிக்கைகள், திமுகவை வேறு விதமாக பாதித்து விட்டது.

விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராக பொன்முடி இருந்தாலும், அவருக்கு வன்னியர் சமூக மக்களின் வெறுப்பு அதிகமாக இருப்பதால், வன்னிய தலைவர்களான ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்றவர்களே, தொகுதி முழுவதும் திமுகவுக்காக அதிக அளவில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இது தவிர, செயல்பாடு இல்லாமல் முடங்கி இருக்கும் ஜகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை மற்றும் வன்னிய குல ஷத்ரிய சங்கம் சார்பில், ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி சொல்லும் போஸ்டர்கள் ஆங்காங்கே தொகுதி முழுவதும் பளிச்சிடுகின்றன.

இது, ஸ்டாலின் மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மருத்துவர் ராமதாசை இன்னும் கோபப்படுத்தியதால், தேர்தல் பிரச்சார லிஸ்டில் இல்லாத அவர், இன்று நேரடியாகவே பிரச்சாரத்தில் களமிறங்குகிறார்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஆறு நாட்களே எஞ்சி உள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறுவது, திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு கௌரவ பிரச்சினை ஆகிவிட்டது.

மறுபக்கம், வன்னியர் சமூகத்தின் வாக்குகளை குறி வைத்து, திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட அறிக்கை, மருத்துவர் ராமதாசையும் உசுப்பேற்றி விட்டுள்ளது.

இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், திமுக, அதிமுக, பாமக என மூன்று கட்சிகளின் தலைவர்களையும் டென்ஷனாக்கி உள்ளது என்பதே தற்போதைய நிலவரம்.