நாராயணசாமியின் ஆட்சி காலம் புதுச்சேரியின் இருண்ட காலம்: அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேட்டி!

நாராயணசாமி தலைமையிலான ஆட்சி காலம் புதுச்சேரியின் இருண்ட காலம் என்று அம்மாநில அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் நினைத்தால், காங்கிரஸ் கட்சியால் ஒருநாள் கூட ஆட்சியில் தொடர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் இந்திரா நகர் தொகுதியில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரனை ஆதரித்து ரங்கசாமியுடன் சென்று அன்பழகன் வாக்கு சேகரித்து வருகிறார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில்  கடந்த பதினெட்டு மாதங்களாக அரிசி வழங்கப்படவில்லை. கேட்டால் ரங்கசாமிதான் இதை தடுத்தார் என்று கூறுகின்றனர்.

இது பொய்யான தகவல் ஆகும். ரங்கசாமி நினைத்தால், புதுவையில் ஒருநாள் கூட காங்கிரசால் ஆட்சியை தொடர முடியாது.

தேசிய கட்சியான காங்கிரஸ் மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடான கூட்டணியை அமைத்து, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தையே இழந்து விட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த சாதனையை சொல்லி முதல்வர் நாராயணசாமி ஓட்டு கேட்க தயாரா? புதுச்சேரி தன்னால்தான் காப்பாற்றப்பட்டது என்று அவர் கூறுவது உண்மை அல்ல.

பாஜக அல்லாத கட்சிகளே பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தாலும், அவை மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து, தங்கள் மாநிலத்திற்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்கின்றன.

ஆனால், ஆளும் கட்சியின் மோதல் போக்கு காரணமாக, மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகின்றன.

அதனால், கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்ப்பது போன்ற எதையுமே ஆளும் காங்கிரஸ் அரசால் செய்ய முடியவில்லை. நாராயணசாமியின் ஆட்சிகாலம் புதுவையின் இருண்ட காலம் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.