ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? எடப்பாடியை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரின் மகன் ஸ்டாலின். சிறு வயதிலேயே அரசியலில் தீவிரமாக களமிறங்கி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் என அனைத்து பொறுப்புக்களையும் வகித்துள்ளார் அவர்.

ஆனால், கலைஞர் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்தில், ஒரு நாள் கூட அவரால் முதல்வர் நாற்காலியில் அமரமுடியவில்லை.

ஆனால், முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ ஆகி, அமைச்சர் ஆகி, தற்காலிக முதல்வராகவும் மூன்று முறை பொறுப்பு வகித்தவர் ஒ.பன்னீர் செல்வம்.

அதேபோல், சசிகலா சிறை சென்றதால், முதல்வர் பொறுப்பில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி, மூன்று ஆண்டுகளுக்கும் மேல் தமது முதல்வர் பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், கலைஞர் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் எடப்பாடி ஜெயலளிதாவின் மறைவால், விபத்தாக முதல்வரானவர் என்று நாங்குநேரியில் பேசியதை மேற்கோள் காட்டினார்.

சசிகலா இவரை முதல்வராக்கினால், இவரோ சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். “காலில் விழுந்து முதல்வரானவர் கூட இங்கு உண்டு. ஆனால் இவரோ சசிகலா காலில் தவழ்ந்து முதல்வரானவார்” என்று காரசாரமாக பேசினார்.

எடப்பாடி, மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக போட்டியிட தயாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயகுமார்,  ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கான  பிரச்சனைகளை சரி செய்யாமல் கோட்டை விட்டார். எனவே,  இனி கோட்டை பக்கமே அவரால் வரமுடியாது  என்றார்.