நாங்குநேரியில் அதிமுகவின் மண்ணின் மைந்தர் பிரச்சாரம்: பதிலடி கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில், வன்னியர் அரசியல் எப்படி பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதுபோல, நாங்குநேரி தொகுதியில், மண்ணின் மைந்தர் பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் காங்கிரஸ் தலைவர்கள் அதிமுகவுக்கு கொடுக்கும் பதிலடி கொஞ்சம் வலுவாகவே இருக்கிறது.

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், மண்ணின் மைந்தர், அவருக்கு வாக்களித்தால், தொகுதி மக்களின் பிரச்சினையை உடனுக்குடன் தீர்த்து வைப்பார் என்று அதிமுகவின் சார்பில் பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பலர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்றாலும், 1991-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரான அதிமுகவை சேர்ந்த  நடேசன் பால்ராஜ் வெளியூரை சேர்ந்தவர்.

இதை மறந்துவிட்டு, மண்ணின் மைந்தர் கோஷத்தை அதிமுக முன்வைப்பது, தங்கள் மீதே விமர்சனம் செய்து கொல்வதற்கு சமம் என்று அதிமுகவினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி, வசந்தகுமாரின் பேராசையால்தான், நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், காங்கிரஸ் வெளியூரில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரூபி மனோகரனின் பெருமைகளை எல்லாம் காங்கிரசும், கூட்டணி கட்சியான திமுகவும் தொகுதி முழுக்க பேசி வருகின்றன.

கட்சிக்கு விசுவாசமாக இருந்து, மக்களுக்காக உழைக்கும் நபரை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. ரூபி மனோகரன் பதினைந்து ஆண்டு காலம் ராணுவத்தில் பணிபுரிந்த கட்டுக்கோப்புக்கு சொந்தக்காரர் என்று ஏழை, எளியோருக்கு தொடர்ந்து உதவிகளை செய்துவருபவர் என, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ போன்றோரும் தமது பிரச்சாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.