தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார  வெற்றி: உலக சாதனை படைத்தது இந்திய அணி!

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர், ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் 10 டெஸ்ட் தொடரை வென்றதே உலக சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது, சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

புனேயில் நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது கேப்டன் கோலிக்கு  30வது டெஸ்ட் வெற்றி ஆகும். 37 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்திலும், 35 வெற்றிகளுடன் மற்றொரு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன கோஹ்லியின் அட்டகாச இரட்டை சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 605 ரன்கள் என்ற இமாலய இலக்கை அடைந்தது.

பின்பு பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய பவுலர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், 275 ரன்களுக்கு சுருண்டது, பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்க அணியை, மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய அணி பணித்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ், 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில், விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹா பிடித்த ஒரு கேட்ச், அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தியா – தென்னாப்பரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.