ஜி.கே.வாசன் பாஜகவில் இணைகிறாரா?: மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் டெல்லி பயணம்!

தமிழகத்தில் ஜெயலலிதா எதிர்ப்பு அலை கடுமையாக வீசிய 1996 –ம் ஆண்டு. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி வாய்ஸ் கொடுத்த நேரம்.

மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் அதிமுகவோடு கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது.

கடும் கோபத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி.கே.மூப்பனார் தலைமையில் உதயமானது. திமுகவுடன் கூட்டணியும் உருவானது.

அந்த தேர்தலில், திமுக – தமாக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. மத்திய அமைச்சரவையில் இரு கட்சிகளும் பங்கேற்றன.

ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் தமாகா தொடர்ந்து இறங்குமுகத்தை சந்தித்தது. ஒரு கட்டத்தில் தமாகா காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் இணைந்தது. மூப்பனாரும் மறைந்தார்.

மூப்பனார் மறைவுக்கு பின்னர், ஜி.கே.வாசன் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தனித்து நின்று தேர்தலை எதிர்கொண்டது. இதில், ஜி.கே.வாசன் போட்டியிடாமல் ஒதுங்கினார்.

அதன் பிறகு, தமது தந்தை பாணியில், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் அவரது கட்சிக்கு வந்தனர்.

பின்னர், கடந்த சட்டமன்ற தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இணைத்து போட்டியிட்ட அவரது கட்சி படு தோல்வியை சந்தித்தது. கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா படு தோல்வியை சந்தித்தது.

ஜி.கே.வாசன், தமாகாவை மீண்டும் தொடங்கியபோது, அவருடன் சென்ற காங்கிரஸ் பிரமுகர்கள் பலர், மீண்டும் காங்கிரசில் ஐக்கியம் ஆகிவிட்டனர்.

தற்போது, ஜி.கே.வாசன் மீது பற்று கொண்ட சிலர் மட்டுமே இன்னும் அவரது கட்சியில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் உச்சி மாநாட்டிற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஜி.கே.வாசனுடன் மிகவும் கனிவாக அன்போடு பேசியதுடன், டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் டெல்லி பயணமாக உள்ள வாசன், தமாகா வை பாஜகவுடன் இணைத்து, அக்கட்சியை தமிழகத்தில் வேரூன்ற செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.

மென்மையான அணுகுமுறையும், கெட்ட பெயரும் இல்லாத வாசன், பாஜகவுக்கு வந்தால், அதன் மூலம் தமிழகத்தில் வளர்ச்சி காணலாம் என்று டெல்லி தலைமை கணக்கு போடுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து தனிக்குடித்தனம் வந்த வாசன், அதை நடத்துவதற்கு போராட வேண்டிய நிலையில் இருப்பதால், அவர் பாஜகவுக்கு செல்வதே, அவருடைய விசுவாசிகளுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.