திமுகவிலும் இளம்பெண்கள் பாசறை: கனிமொழியை உசுப்பேற்றும்  உதயநிதி!

அதிமுகவில் என்னை போன்ற அடிப்படை தொண்டன் கூட முதல்வராக முடியும், ஆனால், திமுகவில் வாரிசுகளால் மட்டுமே உயர் பதவியை பிடிக்க முடியும் என்று முதல்வர் எடப்பாடி, தமது தேர்தல் பிரச்சாரத்தில் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கலாம்.

அதை நிரூபிப்பது போலவே, உதயநிதி இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, திமுகவில் ஒவ்வொரு காட்சிகளாக அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.

திமுகவில், கருணாநிதி தீவிர அரசியலில் கவனம் செலுத்திய காலங்களிலேயே ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அவர்களது குடும்ப வாரிசுகள் அதிகாரங்களில் கோலோச்ச தொடங்கி விட்டனர்.

கருணாநிதியின் இறுதி காலத்தில், மு.க.அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர், கட்சியின் நிர்வாகம் முழுவதும் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் வந்தது. கனிமொழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.

இது ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வின்போதே இது நன்கு தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும், கட்சியின் நடவடிக்கைகள் சுமூகமாகவே தொடர்ந்தன.

இந்நிலையில், ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவரது  மகன் உதயநிதி, இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் எந்த அளவுக்கு உதயநிதியின் வரவை ஏற்றுக்கொண்டார்களோ தெரியாது. ஆனால், அதை யாரும் விமர்சிக்கவில்லை.

இந்நிலையில், உதயநிதியின் நடவடிக்கைகள் அனைத்தும், கட்சியை முழுக்க முழுக்க தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாகவே இருக்கிறது என்று திமுகவிற்கு உள்ளேயே பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன.

இதை மெய்ப்பிக்கும் விதத்தில், அதிமுகவை போன்றே திமுகவில் இளம்பெண்கள் பாசறை ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் பாசறை தொடங்கப்பட்டால், கனிமொழியின் கட்டுப்பாட்டில் இருக்கும் திமுக மகளிரணி பலவீனமாகி, பெயருக்கு மட்டுமே இயங்கும் நிலை உருவாகும். கனிமொழிக்கும் கட்சியில் உள்ள அதிகாரங்கள் குறைந்து விடும்.

கனிமொழியின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலேயே திமுகவில் இளம்பெண்கள் பாசறை தொடங்கப்படுவதாக, அவரது ஆதரவாளர்கள் பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு பிடிக்காதவர்கள், ஸ்டாலினை பிடிக்காதவர்கள், தென்மாவட்டத்தில் கட்சியில் தமக்கு உள்ள ஆதரவு, பணம் மட்டும் படைபலம் உள்ள ஆதரவாளர் பட்டாளத்துடன், கனிமொழி ஒருநாள் திமுகவை கைப்பற்றுவார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

கனிமொழி சும்மா இருந்தாலும், ஸ்டாலின், உதயநிதி போன்றவர்கள், அவரை உசுப்பேற்றி சும்மா இருக்க விடமாட்டார்கள் என்ற கோணத்திலும் திமுகவில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.