விசிக ரவிகுமார் எப்போது விருத்தாசலம் எம்.பி ஆனார்? ஸ்டாலின் பேச்சால் மீண்டும் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்!

பொதுக்கூட்டங்களில் வாய் தவறி வரும் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை கலாய்ப்பது நெட்டிசன்களின் வாடிக்கை ஆகிவிட்டது. இதில், அடிக்கடி மாட்டிக் கொள்பவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். ஏற்கனவே மதில் மேல் பூனை..பூனை மேல் மதில் என்று ஸ்டாலின்  சொன்ன பழமொழியை வைத்துக்கொண்டு கலாய்த்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ரவிகுமாரை வெற்றிபெற செய்ததற்கு நன்றி என்று கூறுவதற்கு பதில் விருதாசலம் தொகுதியில் ரவிகுமாரை வெற்றி பெற செய்ததற்கு நன்றி என ஸ்டாலின் வாய் தவறி கூறி விட்டார் என்று  முன்னணி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல், இன்னும் சரியாக நெட்டிசன்களுக்கு எட்டவில்லை. அதனால், இதுவரை, இது தொடர்பான மீம்ஸ்கள் இன்னும் வரவில்லை.

அதேபோல், ஏஜி என்ற ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு, ஒரு இதழில், ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வெளியாகி இருக்கிறது.

இதை வலுவாக பிடித்துக்கொண்ட பாமக தரப்பு, அதை வைத்து  முடிந்தவரை கலாய்த்து இருக்கிறது. குறிப்பாக, திமுகவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், விளக்கம் அளிக்கும் அளவுக்கு. அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த விளக்கத்தின் ஒரு பகுதி இதோ,

“முரசொலி பத்திரிக்கையில் வெளிவந்ததை மறைத்து விட்டு, பத்திரிக்கை செய்தியில் தவறுதலாக வெளி வந்துள்ள “Typographical Error”-ஐ வைத்துக் கொண்டு, கழகத் தலைவர் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாத, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் என்பதைக் குறிப்பிட்டு, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதிலிருந்தே “வன்னியர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும்”, “ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் திரு. ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கும்” மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற கழகத் தலைவரின் அறிவிப்பை- இதுநாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகிறது”

ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இல்லாமல், இதை எல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு கலாய்ப்பதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துவதுதான் நல்லது.

ஏனென்றால், பேசும்போது நாக்கு தடுமாறுவதும், எழுதும்போதும், தட்டச்சு செய்யும்போதும் வார்த்தைகளில் பிழை வருவதும் அனைவருக்கும் சகஜம்தானே.