விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பொன்முடியை ஓவர்டேக் செய்த எ.வ.வேலு!

திமுகவில் கடந்த சில ஆண்டுகளாக , அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வருபவர்களே கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். எ.வ.வேலு, தொடங்கி, ஜெகத்ரட்சகன், ரகுபதி, முத்துசாமி, செல்வகணபதி, சேகர்பாபு என நீளும் பட்டியலில் புதிதாக கோலோச்சுவோர்கள் செந்தில் பாலாஜியும், தங்க தமிழ் செல்வனும் ஆவர்.

திமுகவின் கடந்தகால தேர்தல் அணுகுமுறைகள், தற்போது அதிமுகவின் நிகழ்கால அணுகுமுறைக்கு முன்னால் எடுபடாமல் போவதே இதற்கு காரணம் என்கின்றனர்.

அதனால், தேர்தல் பிரச்சார உத்திகள், பணப்பட்டுவாடா போன்ற விஷயங்களில் அதிமுகவில் இருந்து வந்தவர்களின் செயல்பாடே, நல்ல ரிசல்டை தருகிறது என்பதால், ஸ்டாலினே அதற்கு ஓகே சொல்லி விடுகிறார்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்து வரும், பொன்முடியிடமே விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான நிதி நிர்வாக பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். இது வரையில் அப்படித்தான் திமுகவின் நடைமுறையாக இருந்தது.

ஆனால், நாங்குநேரி பிரச்சாரத்தில் இருக்கும்போதே, விக்கிரவாண்டியில் உள்ள பொறுப்பாளர்களை செல்பேசியில் அழைத்து, அங்குள்ள நிலவரம் குறித்த விவரங்களை கேட்டு அறிந்துள்ளார் ஸ்டாலின்.

கிடைத்த தகவல்கள், பொன்முடி மீது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், விக்ரவாண்டிக்கு வருவதற்கு முன்பாகவே, நிதி நிர்வாக பொறுப்பை, அவர் எ.வ.வேலுவிடம் ஒப்படைத்து விட்டார்.

ஏற்கனவே, பொன்முடிக்கும் எ.வ. வேலுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில், இது பொன்முடி ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இருந்தாலும், தலைவர் கட்டளையை மீறி, பொன்முடியால் எதுவும் செய்ய முடியாது என்பதால், வேறு வழியின்றி அதை ஏற்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார் பொன்முடி.

எனினும், திமுகவின் வெற்றி ஒன்றே இலக்கு என்பதால், இந்த நேரத்தில் எதுகுறித்த மன வருத்தம் மற்றும் கருத்து வேறுபாடுகளை மறந்து பொன்முடி பணியாற்றி வருகிறார் என்கின்றனர்.