விக்கிரவாண்டியில் ரவுண்டு கட்டும் ஸ்டாலின் – எடப்பாடி – ராமதாஸ்: களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் ரவுண்டு கட்டும் தலைவர்களால், நாளுக்குநாள் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்கவில்லை என்றால், ஒரு தொகுதியை இழந்ததாக ஆகிவிடும். அதிமுக தோற்றால், அது அதிமுக-பாமக கூட்டணியை பலவீனப்படுத்திவிடும்.

அத்துடன், அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு இந்த தேர்தலே ஒரு முன்னோட்டம் என்பதாலும், திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் இடைத்தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதனால், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கங்கணம் கட்டிக்கொண்டு, பம்பரமாக சுழன்று பணியாற்றும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக, திண்ணை பிரச்சாரம், வாக்கிங் பிரச்சாரம், வாகன பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் என, தொகுதி முழுவதும் வலம் வந்த திமுக தலைவர், நேற்று முதல் விக்கிரவாண்டியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, ஸ்டாலின் நகர், ஆரியூர், வேங்காமூர் போன்ற பகுதிகளில் திண்ணை பிரச்சாரம், வாக்கிங் பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், அதன்மூலம் இதுபோன்ற குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று அப்போது ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை விக்கிரவாண்டி தொகுதிக்கு வந்த முதல்வர் எடப்பாடி, முண்டியம்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, தமது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, எம்ஜிஆர், அம்மா வழியில் அதிமுக அரசு, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றார்.

உண்மையான எதிர்கட்சியாக நடந்து கொண்டால், அடுத்த தேர்தலில் திமுக எதிர்கட்சி வரிசையிலாவது அமரமுடியும். அப்படி இல்லை என்றால், அதுவும் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாம், விபத்தால் வந்த முதல்வர் அல்ல என்றும், ஸ்டாலின்தான், அவரது தந்தை இறந்தவுடன், திமுக தலைவர் பதவியில் அமர்ந்தார் என்றும் எடப்பாடி கூறினார். 122  எம்.எல்.ஏக்கள் தம்மை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் எடப்பாடி கூறினார்.

இதனிடையே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் வரும் 15 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

பாமக வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள இந்த தொகுதியில், ராமதாசின் பிரச்சார திட்டமே இல்லை. அன்புமணி மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக இருந்தது.

ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், வன்னியர் பற்றி வெளியிட்ட அறிக்கை, ராமதாசை மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளது. இந்த தொகுதியில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஜெயித்தால் கூட, அது பாமகவுக்கு இழுக்கு என்று நினைத்த ராமதாஸ், அலட்சியமாக இருக்கக்கூடாது என்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

இந்த பிரச்சாரத்தில், திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனங்களையே ராமதாஸ் அதிகளவில் முன்வைப்பார் என்பதால், பிரச்சார களத்தில், இனி கடும் அனல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.