நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா?

விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டம் பற்றி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிளின் முக்கிய தலைவர்கள் யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

ஆனால், கடந்த வியாழக்கிழமையன்று, விக்ரவாண்டிக்கு வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மட்டுமே, நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

நந்தன் கால்வாய் திட்டம் என்றால் என்ன?

திருவண்ணாமலை வட்டம், சம்மந்தனூா் கிராமத்தில் உள்ள துறிஞ்சல் ஆற்றின் குறுக்கே கீரனூா் அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டின் இடது புறமாக கால்வாய் வெட்டி, அதன் மூலம் துறிஞ்சல் ஆற்றின் தண்ணீரைத் திருப்பி விழுப்புரம் மாவட்டம் வரை கொண்டு செல்வதே நந்தன் கால்வாய் திட்டமாகும்.

இதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 22  ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த கால்வாயின் நீளம் நீளம் 37.88 கி.மீ. ஆகும்.

இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்தும், பல்வேறு காலகட்டங்களில் பல கோடி ரூபாய் செலவிட்டும் இதுவரை விழுப்புரம் மாவட்டத்துக்கு தண்ணீா் வரவில்லை.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக, துறிஞ்சல் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாகி, கீரனூா் அணை நிரம்பியுள்ளது. இதில் இருந்து நந்தன் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீா் திருவண்ணாமலை மாவட்டம், கொளத்தூா் வரை மட்டுமே வந்துள்ளது.

இந்தத் தண்ணீா் கொளத்தூரை அடுத்துள்ள கொணலூா், பாப்பாந்தாங்கள் உள்ளிட்ட ஏரிகளுக்கு சென்ற பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதப்பூண்டி ஏரியை அடைய வேண்டும். ஆனால், கால்வாய் சீா்செய்யப்படாமல் இருப்பதால் தண்ணீா் அங்கேயே தேங்கி நின்று வீணாகிறது.

பல்வேறு தூர்வாரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் தமிழக அரசு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 36 ஏரிகள் பயன்பெறும் நந்தன் கால்வாயை சீரமைக்க இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை.

அண்ணா அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருந்த ஏ.கோவிந்தசாமி காலத்தில்தான், இந்த திட்டம் முக்கியத்துவம் பெற்றது. அதை செயல்படுத்த அவர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

அதனால், கோவிந்தசாமியை பார்த்தாலே, அண்ணா அருகில் இருக்கும் அமைச்சர்கள், நந்தன் கால்வாய் வருகிறது என்றே அழைப்பார்களாம்.

அவருக்கு மணிமண்டபம் கட்டுவதோடு, நந்தன் கால்வாயையும் சீரமைத்து, இரண்டு மாவட்டத்தில் உள்ள 36 ஏரிகளை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகளை பாதுகாப்பதே, அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

.எனவேதான், நந்தன் கால்வாய் திட்டத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, விக்கிரவாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.