புதுச்சேரி தப்பித்ததா? பின்னோக்கி செல்கிறதா?: நாராயணசாமி – ரங்கசாமியின் அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரம்!  

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்படுகிறது என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், நான் முதலமைச்சராக வந்ததால்தான் புதுச்சேரி தப்பித்தது. இல்லை என்றால், குட்டிச்சுவர் ஆகி இருக்கும் என்கிறார் நாராயணசாமி.

புதுச்சேரி இந்திரா நகர் இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள புவனேஸ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.  என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களைக்கூட இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறியது என்ன ஆனது? பஞ்சாலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை என்ன நிலையில் உள்ளது? என்றும் ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.

இலவச அரிசி வழங்காததற்கு கவர்னர் மற்றும்  எதிர்க்கட்சிகள் மீது பழியை போடுகின்றனர். நாங்கள் ஏன் இலவச அரிசி வழங்குவதை தடுக்கப் போகிறோம்.

தினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டுதான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் யாரேனும் ஒரு சிறிய இடம் வாங்கி கூட பதிவு செய்ய முடியவில்லை என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.

ஆனால், புதுச்சேரியில் மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து வாக்குசேகரித்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, காமராஜ் நகர் தொகுதி மக்கள் தங்களுக்கு அமோக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி உள்ளோம். மாநிலத்தின் வருமானத்தையும் பெருக்கி உள்ளோம். அரசு ஊழியர்கள் சம்பளம்,  முதியோர், சென்டாக் என அனைத்தையும் சரியான நேரத்தில் வழங்கி வருகிறோம்.

கவர்னர் கிரண்பெடி இலவச அரிசி வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடுவதால் அரிசி வழங்க முடியவில்லை.

மத்திய அரசு புதுச்சேரியை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு புதுச்சேரியை பார்க்கிறது. நான் தப்பித்தவறி முதல்-அமைச்சராக வந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். அதனால்தான் புதுச்சேரி தப்பித்தது. இல்லை என்றால் குட்டிச்சுவர் ஆகி இருக்கும் என்றார்.

இவ்வாறு நாராயணசாமி மற்றும் ரங்கசாமி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை மாறி மாறி சுமத்திக் கொள்வதால், புதுச்சேரி இடைத்தேர்தல் அனல் பறக்கும் பிரச்சார களமாக மாறி இருக்கிறது.