அதிமுகவுக்கு புதிய தமிழகத்தின் ஆதரவு இல்லை: நாங்குநேரியில் தேவேந்திரர்களை வளைக்கும் காங்கிரஸ்!

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்து விட்டார். இதையடுத்து, தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க, காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இடைத்தேர்தல் அறிவித்த உடனேயே, பாமக, தமாக ஆகிய கூட்டணி  கட்சிகள் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து விட்டன. தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து பேசிய பின்னர், அக்கட்சியின் ஆதரவும் உறுதியானது. அண்மையில், பாஜகவும் ஆதரவு தெரிவித்து விட்டது.

ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை மட்டும், அதிமுக தரப்பில் இருந்து யாரும் சந்தித்து ஆதரவு கோரவில்லை.

புதிய தமிழகம் பிரச்சாரத்திற்கு வந்தால், அங்குள்ள முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்ற காரணத்தால், அதிமுக டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்து ஆதரவு கோரவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், புதிய தமிழகம் இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிக்காது என்று டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாகவே அறிவித்து விட்டார்.

இதையடுத்து, நாங்குநேரி தொகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் முக்கிய பிரமுகர்களை நேரடியாக சந்தித்து, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு, வேட்பாளர் ரூபி மனோகரன் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.

புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்தும், அவரை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்காத அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற கோபம், தேவேந்திரகுல மக்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த கோபம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, அதிமுக தரப்பில் இருந்து என்ன மாற்று திட்டம் தயாராகிறது என்று இதுவரை தெரியவில்லை.